இணைப்பு சாலை அமைக்கப்படாததால் 13 ஆண்டாக பயன்பாட்டுக்கு வராத பாலம்
இணைப்பு சாலை அமைக்கப்படாததால் 13 ஆண்டாக பயன்பாட்டுக்கு வராத பாலம்
ADDED : ஜன 24, 2025 01:07 AM

மயிலாடுதுறை:சீர்காழி அருகே இணைப்பு சாலை அமைக்கப்படாததால், கட்டி முடிக்கப்பட்ட பாலம், 13 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
தமிழகத்தில், 2004ம் ஆண்டு சுனாமி பேரிடருக்கு பின், கடலோர கிராம வளர்ச்சிக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி முதல் பழையார் வரை, 26 மீனவ கிராமங்களை ஒருங்கிணைக்கும் வகையில், சுனாமி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், புதிய சாலை மற்றும் ஆறுகள், வாய்க்கால்கள் மீது பாலங்கள் அமைக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, சீர்காழி அருகே திருமுல்லைவாசல்- - கீழமூவர்கரை இடையே உப்பனாற்றின் மீது, 18 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டது. 2010ல் துவங்கிய பணி, 2012ல் 95 சதவீதம் முடிந்தது.
ஆனால், அப்பகுதி நில உரிமையாளர்களுக்கு உரிய பணம் கொடுக்கப்படாததால், இணைப்பு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இன்னமும், நிலம் கையகப்படுத்தும் பணி முழுமை பெறவில்லை. அதனால், இணைப்பு சாலை இதுவரை அமைக்கப்படாததால், 13 ஆண்டுகளாக உப்பனாறு மீது கட்டப்பட்ட புதிய பாலம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
பாலம் பயன்பாட்டிற்கு வராததால், மீனவர்கள் நீண்ட துாரம் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. பணியை துரிதப்படுத்த தவறிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

