உடலை வாய்க்காலில் வீசிய கொடூரம்.. மறியல் போராட்டம்; கஞ்சா ஆசாமிகள் 6 பேரிடம் விசாரணை
உடலை வாய்க்காலில் வீசிய கொடூரம்.. மறியல் போராட்டம்; கஞ்சா ஆசாமிகள் 6 பேரிடம் விசாரணை
ADDED : மார் 06, 2024 03:28 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார். கஞ்சா போதையில் சிறுமி கொலை செய்யப்படிருக்கலாம் என்ற சந்தேகத்தில், 6 பேரை பிடித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியை சேர்ந்தவர் நாராயணன்; டாடா ஏஸ் வாகன டிரைவர். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், 2வது மகள் ஆர்த்தி, 9; அங்குள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ம் தேதி மதியம் 1:00 மணிக்கு வீட்டு அருகே விளையாடிய ஆர்த்தி மாயமானார்.
புகாரின்பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வந்தனர். அப்பகுதி சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில், வீட்டு அருகே 100 மீட்டர் துாரத்தில் சிறுமி நடந்து செல்லும் காட்சிகள் மட்டுமே பதிவாகியிருந்தது. அதன்பிறகு சிறுமி சென்ற தடயம் ஏதும் கிடைக்கவில்லை.
சிறுமி உடல் மீட்பு
இதனால் சோலை நகர் பகுதியில் சிறுமியை யாராவது கடத்தி வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கழிவுநீர் தொட்டி, பிரிட்ஜ்களில் சோதனை செய்தனர்.மொபைல்போன் டவர் சிக்னலை வைத்து, 300 நபர்களிடம் விசாரித்தனர். 150க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆனாலும், சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாயமாகி 4 நாட்கள் கடந்தும் சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்.
இந்நிலையில், நேற்று மதியம் 2:00 மணிக்கு, சிறுமியின் வீட்டில் இருந்து 100 மீட்டர் துாரத்தில், கண்ணதாசன் வீதி மாட்டு கொட்டகை பின்புற கழிவுநீர் வாய்க்காலில், சந்தேகத்திற்கிடமாக ஒரு மூட்டை கிடப்பதை பொதுமக்கள் பார்த்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூட்டையை கைப்பற்றி பார்த்தபோது, சிறுமி ஆர்த்தி கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்டு, உடலை வேஷ்டியால் சுற்றி கழிவுநீர் வாய்க்காலில் வீசப்பட்டுள்ளது தெரியவந்தது. இத்தகவல் காட்டுத்தீயாக பரவியதால், அப்பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மக்கள் அங்கு கூடியதால் பதற்றம் ஏற்பட்டது.
சிறுமியை கண்டுபிடிக்க போலீசார் விரைவாக செயல்படாமல், அலட்சியமாக இருந்ததால், இச்சம்பவம் நடந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும், மீட்கப்பட்ட சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல விடாமல் தடுத்தனர். அதையடுத்து, கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, ஆம்புலன்சில் சிறுமியின் உடல் ஏற்றி, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமியின் உடலை கண்டு அப்பகுதி மக்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
சாலை மறியல்
போலீசாரை கண்டித்து இறந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு எதிரில் நேற்று மதியம் 2:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அலட்சியத்தை கண்டித்தும், குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர். எம்.எல்.ஏ.,க்கள் பிரகாஷ்குமார், நேரு ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இரவு 7:00 மணி வரைமறியல் போராட்டம் தொடர்ந்தது.
தள்ளுமுள்ளு:பெண் மயக்கம்
மறியல் போராட்டத்தை உள்ளூர் போலீசாரால் சமாளிக்க முடியாததால், தேர்தல் பணிக்காக வந்த துணை ராணுவ படையினர் 100 பேர் வரவழைக்கப்பட்டனர். மேலும் எஸ்.பி.,க்கள் வீரவல்லவன், ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
கஞ்சா போதையில் கொடூரமா
சிறுமியின் உடல் கதிர்காமம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்பு, அங்கிருந்து ஜிப்மருக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சிறுமி மாயமான அன்றே துண்டால் கழுத்து நெறித்து கொலை செய்து உடலை மறைவான இடத்தில் வைத்திருந்து, பின்பு வாய்க்காலில்உடலை வீசியது தெரியவந்துள்ளது.
அப்பகுதியில் கஞ்சா பிடிக்கும் போதை கும்பல் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற சந்தேகத்தில்,அதே பகுதியைச் சேர்ந்த6 பேரைபிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று நடக்கும் பிரேத பரிசோதனையில் சிறுமி எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்ற விபரம் தெரிய வரும்.

