ADDED : ஏப் 26, 2025 07:28 AM

சென்னை: சாலையில் கிடந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த கொத்தனாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சென்னை புழுதிவாக்கம், ஈஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் உமாபதி, 54; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, நங்கநல்லுாரில் வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, கீழே கிடந்த கை பையை எடுத்து பார்த்தபோது, அதில் கட்டு கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தன் மகள் கற்பக வள்ளியை தொடர்பு கொண்டார்.
அவரது ஆலோசனைப்படி, மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று, பணத்துடன் கூடிய கை பையை ஒப்படைத்தனர். போலீசார், பையை சோதனையிட்டதில் அதில் 2.05 லட்சம் ரூபாயும் எச்.டி.எப்.சி., வங்கி காசோலையும் இருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டதில், பையை தவறவிட்டவர், நங்கநல்லுார், ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகா மீனாட்சி, 37, என்பது தெரிந்தது.
அவரை, மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு போலீசார் வரவழைத்து, பணம் மற்றும் காசோலையுடன் கூடிய பையை ஒப்படைத்தனர். பின், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், உமாபதி மற்றும் அவரது மகளுக்கு சால்வை அணிவித்து, ஏழ்மையிலும் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையை பாராட்டினார்.