எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை மதிக்காமல் 'அதிகாரிகள் ராஜ்ஜியம்!' : ஸ்டாலின் 'அப்செட்'
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை மதிக்காமல் 'அதிகாரிகள் ராஜ்ஜியம்!' : ஸ்டாலின் 'அப்செட்'
UPDATED : அக் 29, 2025 11:57 PM
ADDED : அக் 29, 2025 11:45 PM

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், பெண் நிர்வாகி ஒருவர் பேசும்போது, 'தமிழகத்தில் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை மதிக்காமல், அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது' என சரவெடியாக வெடித்தார். அதை கேட்ட நிர்வாகிகள் கரகோஷம் எழுப்பி, அவரது பேச்சை வரவேற்றனர். அதை கண்ட முதல்வர் ஸ்டாலின், 'அப்செட்' ஆனார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்கவுள்ளது. தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, நவ., 4 முதல், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி துவங்குகிறது; டிச., 4ல் முடிவடைகிறது.
ஆர்வம் இல்லை
வாக்காளர் திருத்தப் பணியின்போது, தி.மு.க., நிர்வாகிகள் என்ன செய்ய வேண்டும் என பயிற்சி அளிப்பதற்காக, 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' என்ற பெயரில், மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் பயிற்சி கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து, அதில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கூட்டத்திற்கு அழைக்கப்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது.
அதில் பெயர், பதவி, மாவட்டம் விபரம் குறிப்பிடப்பட்டிருந்தது. போலீசாரின் சோதனைக்கு பின், அவர்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேடையில், மூத்த நிர்வாகிகளுடன், துணை முதல்வர் உதயநிதிக்கும் இருக்கை போடப்பட்டுஇருந்தது. மேடைக்கு கீழ் முதல் வரிசையில், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் அமர்ந்திருந்தனர்.
கூட்டத்தில், பூத் கமிட்டி பணி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து, அமைச்சர் தங்கம் தென்னரசு, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் விளக்கினர். அப்போது நிர்வாகிகள் ஆர்வமின்றி இருந்தனர்.
அடுத்து, பெரம்பலுார் மாவட்டம், பூலாம்பாடி பேரூர் செயலர் செல்வலட்சுமி பேச வந்தார்.
அவர் பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை தந்தாலும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை அதிகாரிகள் மதிப்பதில்லை. அவர்களின் ராஜ்ஜியம் நடப்பதுபோல் செயல் படுகின்றனர்.
'நாங்கள் கூறுவதை அலட்சியப்படுத்துகின்றனர்' என, சரவெடியாக பேச, அவரது பேச்சை வரவேற்று, அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் என, மேடைக்கு கீழிருந்த அனை வரும், தங்கள் இரு கைகளையும் மேலே துாக்கி, கரகோஷம் எழுப்ப, அரங்கமே அதிர்ந்தது.
இதை கண்ட முதல்வரின் முகம் இருண்டது. அவரை தொடர்ந்து, ராசிபுரம், திருவள்ளூர் நிர்வாகிகள் பேச வந்தபோது, மாநில நிர்வாகி அன்பகம் கலை, அவர்களின் அருகில் சென்று, செல்வலட்சுமி போல் பேச வேண்டாம் என அறிவுரை வழங்கினார்.
அதை ஏற்று அவர்கள், தங்கள் மாவட்டச் செயலர்களின் செயல்பாடுகளை புகழ்ந்து பேசினர்.
கூட்டத்தில், அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் தங்கம் தென்னரசு, என்.ஆர்.இளங்கோ போன்றவர்கள் பேசும்போது, பின்வரிசையில் இருந்த நிர்வாகிகளில் சிலர் அசதியில் துாங்கி வழிந்தனர். ஆனால், செல்வலட்சுமி பேசியபோது எழுந்த கரகோஷத்தால், அனைவரும் புத்துணர்ச்சி பெற்றனர்.
10 சதவீதம்
முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, 'அதிகாரிகள் குறித்து பேசியபோது அனைவரும் கை தட்டியதை கண்டேன். அதிகாரிகளில், 10 சதவீதம் பேர் சரியாக வேலை செய்யவில்லை.
'அதை பெரிதுப்படுத்த வேண்டாம். 'உடன் பிறப்பே வா' என்ற, 'ஒன் டூ ஒன்' நிகழ்ச்சி வாயிலாக நிர்வாகிகளை சந்திக்கும்போது, அவர்கள் அனைத்தையும் கூறுகின்றனர். எனக்கும் எல்லாம் தெரியும்' என கூறினார். கூட்டம் முடிந்து, அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது அனைவரும் செல்வலட்சுமியை புகழ்ந்து பேசினர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

