அலைமோதும் பயணியர் கூட்டம் நெரிசலில் திணறும் பஸ், ரயில் நிலையம்
அலைமோதும் பயணியர் கூட்டம் நெரிசலில் திணறும் பஸ், ரயில் நிலையம்
ADDED : அக் 29, 2024 11:58 PM

சென்னை:தீபாவளி பண்டிகை கொண்டாட, சொந்த ஊருக்கு செல்லும் மக்களால், பஸ், ரயில்களில் கூட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் அலைமோதியது.
புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், திருச்சி, மதுரை, துாத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தும், பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பஸ்கள், மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து இரண்டாவது நாளாக, பயணியர் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு திரண்டு சென்றதால், கிளாம்பாக்கம், கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பஸ் நிலையங்களிலும், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.
தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான விரைவு ரயில்கள், சிறப்பு கட்டண ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் ரயில்களின் படிகளில் அமர்த்தபடி பயணித்தனர்.
சென்னையில் இருந்து நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்களோடு, 2,125 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இது தவிர, பிற முக்கிய நகரங்களுக்கு இடையே, 1,130 பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் பயணியருக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
4 லட்சம் பேர் ரயில்களில் பயணம்
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களோடு, 48க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னை - திருநெல்வேலி, நாகர்கோவில், தாம்பரம் - நாகர்கோவில், சென்னை - கோவை வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து கடந்த இரண்டு நாட்களில், 4 லட்சம் பேர் வரை ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.