PUBLISHED ON : நவ 09, 2024 12:00 AM

ஏலக்காய் டீக்கு ஆர்டர்தந்தபடியே, “வெண்டைக்காயை விளக்கெண்ணையில் வதக்கிய மாதிரி, கூட்டம் நடந்திருக்குது பா...” என, பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
“என்ன கூட்டத்தை சொல்றீர் ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“அ.தி.மு.க., மாவட்டச்செயலர்கள் கூட்டத்தை,சமீபத்துல பழனிசாமி நடத்தினாரே... இதுல, பொதுக்குழு பற்றிய அறிவிப்பு, சசிகலா, பன்னீரை மீண்டும் சேர்க்கிற ஒற்றுமை முயற்சிபத்தி எல்லாம், காரசார விவாதம் நடக்கும்னு மாவட்டச் செயலர்கள் எதிர்பார்த்தாங்க பா...
“ஆனா, இது சம்பந்தமா ஒருத்தர் கூட பேசல... குறிப்பா, ஒற்றுமை முயற்சிக்கு திரைமறைவில் காய் நகர்த்திட்டு இருக்கிறதா சொல்ற ஆறு முன்னாள்அமைச்சர்களும் சத்தமேஇல்லாம வந்துட்டு, வாயேதிறக்காம போயிட்டாங்கபா...
“அதே நேரம், சில சீனியர் மாவட்டச் செயலர்கள் மட்டும், கூட்டம் முடிஞ்சதும் பழனிசாமியைதனியா பார்த்து, சில கருத்துகளை சொல்லியிருக்காங்க... 'ஜெ., இருந்தப்ப, இதெல்லாம் சாத்தியமே கிடையாது... ஆனா, பழனிசாமியை ஈசியா பார்த்து பேச முடியுது'ன்னு சொல்லிட்டுகிளம்பிட்டாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“என்கிட்டயும் அ.தி.மு.க., தகவல்ஒண்ணு இருக்குல்லா...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“சேலம் மாவட்டம், சங்ககிரி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தரராஜன்... இவருக்கு, அதேபகுதியைச் சேர்ந்த பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ்தான் எம்.எல்.ஏ., சீட்வாங்கி குடுத்தாரு வே...
“ஆனா, இப்ப வெங்கடேஷிடம் சுந்தரராஜன் பேசுறதே இல்லையாம்... இதனால,சங்ககிரி தொகுதி அ.தி.மு.க.,வுல ரெண்டு கோஷ்டிகள் உருவாயிட்டு வே...
“பழனிசாமி மைத்துனர் என்பதால, வெங்கடேஷ்கை தான் கட்சியில ஓங்கியிருக்கு... 'கோஷ்டிப்பூசலை பழனிசாமி தட்டி வைக்கலன்னா, சட்டசபை தேர்தல்ல சங்ககிரி வெற்றி கேள்விக்குறியாகிடும்'னு தொண்டர்கள் புலம்புதாவ வே...”என்றார், அண்ணாச்சி.
“அமைச்சருக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்திருக்கார் ஓய்...” என்றார், குப்பண்ணா.
“யாருங்க அது...” எனகேட்டார், அந்தோணிசாமி.
“திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டசபைதொகுதியைச் சேர்ந்தவர்முருகானந்தம்... பெரும் தொழிலதிபரான இவர், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், 2021 சட்டசபை தேர்தல்ல, திருவெறும்பூர்ல போட்டியிட்டு குறைந்த ஓட்டுகள் வாங்கி, தோத்து போயிட்டார் ஓய்...
“இவர், 2026 சட்டசபை தேர்தல்ல, ஏதாவது கட்சிசார்பிலோ அல்லது சுயேச்சையாகவோ போட்டியிட போறதா அறிவிச்சிருக்கார்... இது, இப்ப திருவெறும்பூர் எம்.எல்.ஏ.,வா இருக்கும்,பள்ளிக்கல்வி அமைச்சர்மகேஷ் தரப்புக்கு அதிர்ச்சியை குடுத்திருக்கு ஓய்...
“முருகானந்தத்துக்கு ஊருக்குள்ள நல்ல பெயர்... தொகுதிக்கும் நிறைய சேவை செய்திருக்கார்... இதனால, ஜெயிக்காம போனாலும்,கணிசமான ஓட்டுகளை வாங்கிடுவார் ஓய்...
“இவரால, அமைச்சரின்வெற்றிக்கு பங்கம் வந்துடுமோன்னு அவரது ஆதரவாளர்கள் பயப்படறா... அதனால, 'உங்களுக்கு ஏன் வேண்டாத வேலை... அமைச்சரை எதிர்த்து ஜெயிக்க முடியுமா'ன்னு செல்லமா அறிவுரை சொல்றாளாம்... ஆனாலும், 'போட்டி உறுதி'ன்னு முருகானந்தம் திட்டவட்டமா சொல்றார் ஓய்...” என முடித்தார்,குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.