துணைவேந்தர் மீது அவசர கதியில் வழக்கு ஓய்வு எஸ்.பி., ரத்தினசபாபதி தகவல்
துணைவேந்தர் மீது அவசர கதியில் வழக்கு ஓய்வு எஸ்.பி., ரத்தினசபாபதி தகவல்
ADDED : ஜன 07, 2024 02:46 AM
சேலம்:''பெரியார் பல்கலை துணை வேந்தர் ஜெகநாதன் மீது அவசர கதியில் வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமீறல் தொடர்பாக, எங்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்துள்ளோம்,'' என, ஓய்வு பெற்ற எஸ்.பி.,யான ரத்தினசபாபதி கூறினார்.
அனைத்து பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற எஸ்.பி.,யுமான ரத்தினசபாபதி, சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் மீது பதிவு செய்துள்ள வழக்கு, கைது தொடர்பாக, எங்கள் அமைப்பின் நால்வர் கொண்ட உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தி அறிக்கை வழங்கி உள்ளது.
அதில் புகார்தாரர், உள்நோக்கத்துடனும், சிலரின் துாண்டுதலாலும் புகார் கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
அத்துடன், பூட்டர் பவுண்டேஷன் என்பது லாப நோக்கம் இல்லாத சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனம். இதுபோன்ற நிறுவனம் பல பல்கலைகளில் தற்போதும் செயல்பாட்டில் உள்ளது.
துணை வேந்தர், பதிவாளர் பெயரில், பூட்டர் நிறுவனம் பதிவாகி இருந்தாலும், அது, அடுத்தடுத்து பதவிக்கு வரும் துணை வேந்தர், பதிவாளர் பெயரில் வழக்கம் போல செயல்படுவது இயல்பு.
இந்நிறுவனம், துவங்கிய பின் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, இதுவரை எந்த ஒரு பண பரிமாற்றமும் நடக்கவில்லை. உயர்கல்வி ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தி, அதை மக்கள் பயன்பாடுக்கு கொண்டு வரவே, இத்தகைய நிறுவனங்கள் துவங்கி, செயல்படுகின்றன.
இது தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை, முறையாக விசாரிக்க வேண்டும். அதை விடுத்து அவசர கதியில் வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமீறல் தொடர்பாக, எங்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்துள்ளோம். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
யாதவர் மகாசபை கூட்டமைப்பின் தலைவர் வேலுச்சாமி, முக்குலத்தோர் கூட்டமைப்பின் தலைவர் குணசேகரன், கள்ளர் சமுதாய தலைவர் சிவா உட்பட பலர் உடனிருந்தனர்.