'திட்டங்களுக்கு குடும்பத்தினர் பெயர் மத்திய அரசு சூட்டுவது இல்லை'
'திட்டங்களுக்கு குடும்பத்தினர் பெயர் மத்திய அரசு சூட்டுவது இல்லை'
UPDATED : மார் 07, 2024 07:55 AM
ADDED : மார் 06, 2024 11:52 PM

சென்னை:'தி.மு.க.,வை போல, தங்கள் குடும்பத்தினர் பெயர்களை திட்டங்களுக்கு வைத்து கொள்ளும் வழக்கம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இல்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஆட்சிக்கு வந்ததில் இருந்து, குழுக்கள் மேல் குழுக்கள் மட்டுமே அமைத்து கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், தற்போது, அதில் சலிப்பு காட்டி, மத்திய அரசின் திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றி செயல்படுத்துகிறார்.
நகைச்சுவை
அந்த திட்டங்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பதை கண்டறிய, 'நீங்கள் நலமா' என்று ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார். பெயர் சூட்டும் வைபவத்துக்கு எட்டு பக்க அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்.
முதல்வரின் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், ஒலிம்பிக் தேடல் என, நான்கு முக்கிய மத்திய அரசின் திட்டங்களை வரிசைப்படுத்தி விட்டு, மத்திய அரசு என்ன செய்தது என்று நகைச்சுவை செய்திருக்கிறார் ஸ்டாலின்.
சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் சந்தித்த வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக, 37,000 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டதாக மிகப்பெரிய பொய் கூறியிருக்கிறார் ஸ்டாலின்.
பார்லிமென்டில் தி.மு.க., - எம்.பி., கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதி துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதிலில், 'மிக்ஜாம் புயல் நிவாரணமாக, 7,033 கோடி ரூபாயும்; வெள்ள பாதிப்பு நிவாரணமாக, 8,612 கோடி ரூபாயும் மட்டுமே கேட்டு தமிழக அரசு கோரிக்கை வைத்திருக்கிறது' என்று தெரிவித்தார்.
மர்மம் என்ன?
அதுதவிர, 3,406 கோடி ரூபாய் நிதியில் மேற்கொள்ளப்பட்ட நிவாரண பணிகளுக்கு, அதை விட 10 மடங்கு நிவாரண நிதி கேட்டதன் மர்மம் என்ன?
பிரதமரின் வீடு கட்டும் திட்டம், எரிவாயு மானியம் என, பொது மக்களுக்கு நேரடியாக பயன்பெறும் மத்திய அரசின் திட்டங்கள் ஏராளம்.
அவை, அரசின் திட்டங்களாகவே செயல்படுத்தப்படுகின்றனவே தவிர, தி.மு.க.,வை போல் தங்கள் குடும்பத்தினர் பெயர்களை திட்டங்களுக்கு வைத்து கொள்ளும் வழக்கம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

