24,000 டன் கொள்ளளவில் 13 சேமிப்பு கிடங்குகள் கட்டுகிறது வாணிப கழகம்
24,000 டன் கொள்ளளவில் 13 சேமிப்பு கிடங்குகள் கட்டுகிறது வாணிப கழகம்
ADDED : ஜூன் 24, 2025 11:07 PM
சென்னை:ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக வைக்க கள்ளக்குறிச்சி, கடலுார், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 24,000 டன் கொள்ளளவில் 13 சேமிப்பு கிடங்குகளை, தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகம் கட்ட உள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவு பொருட்களை, இந்திய உணவு கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்கிறது. இந்த பொருட்களை கிடங்குகளில் வைத்து, ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்கிறது.
தற்போது, 18 லட்சம் டன் கொள்ளளவில், 382 சேமிப்பு கிடங்குகளை, நுகர்பொருள் வாணிப கழகம் பயன்படுத்துகிறது. அதில், 14 லட்சம் டன் கொள்ளளவில், 298 கிடங்குகள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமானவை. மீதி, அரசு கிடங்குகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறது.
சொந்த கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையில், வாணிபக் கழகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, கடலுார் தேத்தம்பட்டி, திருப்பூர் பல்லடம், தேனியில், தலா 2,000 டன்; ராணிப்பேட்டை நெமிலி, தென்காசி மாவட்டம் சிவகிரி, அரியலுார் மாவட்டம் தேலுாரில், தலா 3,000 டன்; தாராபுரம், கள்ளக்குறிச்சி, திருப்புவனம், விருதுநகரில், தலா 1,500 டன் கொள்ளளவில் கிடங்குகள் கட்டப்பட உள்ளன.
மேலும், துாத்துக்குடி மீளவிட்டான், ராமநாதபுரம் கடம்பன்குடி, விருதுநகர் சிவகாசியில், தலா 1,000 டன் கொள்ளளவிலான கிடங்குகளும் கட்டப்பட உள்ளன.