ADDED : ஜன 16, 2025 11:27 PM
சென்னை:தமிழக அரசு, பொது மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க, ரேஷன் கடைகள் வாயிலாக கேழ்வரகு வழங்க முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, நீலகிரி, தர்மபுரியில் உள்ள கார்டுதாரர்களுக்கு அரிசிக்கு பதில், 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது.
மத்திய அரசும், ராணுவ வீரர்களுக்கான உணவில் கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய வகைகளை சேர்த்துள்ளது. இதற்கும் கேழ்வரகு தேவைப்படுகிறது.
எனவே, தமிழக விவசாயிகளிடம் இருந்து, 2024 நவம்பர் முதல் இம்மாதம் வரை, 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்காக, கேழ்வரகு வழங்கும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு, 42.90 ரூபாய் தரப்படுகிறது. தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து, கேழ்வரகு கொள்முதல் துவங்க திட்டமிடப்பட்டது.
இருப்பினும், தர்மபுரியில் மட்டுமே கேழ்வரகு கொள்முதல் செய்யப்படுகிறது. அம்மாவட்டத்தில் இதுவரை, 37 விவசாயிகளிடம் இருந்து, 43 டன் கேழ்வரகு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு, 18 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.