ADDED : ஏப் 15, 2025 06:56 PM
சென்னை:''தனித் தமிழ்நாடு, தனிக்கொடி வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். பிரிவினைவாதத்தை துாண்டுகிறார்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
மாநிலங்களை பிரிக்க வேண்டும் என, பிரிவினைவாதத்தை முதல்வர் துாண்டுகிறார். இந்திய நாடு வல்லரசாக வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தனித் தமிழ்நாடு வேண்டும்; தனிக்கொடி வேண்டும் என, முதல்வர் நினைக்கிறார்.
இந்தியா வல்லரசாக, அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்திய நாடு நிர்வாக வசதிக்காக, பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி, ஏதேனும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, தி.மு.க., நினைக்கிறது.
இது மக்களுக்கு, நாட்டுக்கு விரோதமான செயல். மக்கள் இதை சிந்தித்து, வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும்.
பெண்களை அவதுாறாக, அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இது குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

