ADDED : நவ 29, 2024 01:42 AM

சென்னை:நுரையீரல் தொற்று பாதிப்பால், 'மியாட்' மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவனை சந்தித்து, அவரது உடல் நலம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான இளங்கோவன், கடும் காய்ச்சல், சளி காரணமாக, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் சர்வதேச மருத்துவமனையில், 15 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களாக, நுரையீரல் தொற்று அதிகமாகியதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலையில், முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று, இளங்கோவனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிர மணியன், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, செய்தித் தொடர்பாளர் கோபண்ணா உடனிருந்தனர்.