ADDED : ஜன 12, 2025 08:23 AM
சென்னை:   அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து, எப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கும் இடையே, சட்டசபையில் நேற்று முன்தினம் வாக்குவாதம் நடந்தது.
சம்பவம் நடந்து, 12 நாட்களுக்கு பின்னரே, வழக்கு பதிவு செய்யப்பட்டதாக, முதல்வர் கூறினார். அதை பழனிசாமி மறுத்தார்.
இதுதொடர்பான ஆதாரங்களை தருவதாக கூறிய இருவரும், அதை பார்த்து தீர்ப்பு வழங்கும்படி சபாநாயகரிடம் கேட்டனர். அதன்படி, முதல்வர் மற்றும் பழனிசாமி தரப்பில், நேற்று காலை சபாநாயகரிடம் முதல் தகவல் அறிக்கையான எப்.ஐ.ஆர்., விபரங்கள் தரப்பட்டன. இந்த பிரச்னை தொடர்பாக தீர்ப்பு வழங்கும்படி, சபாநாயகரிடம் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தினார்.
சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
இரண்டு தரப்பு ஆதாரங்களை ஆய்வு செய்ததில், முதல்வர் சொன்னஉண்மை அப்படியே இருந்தது. சம்பவம், 12ம் தேதி நடந்தது; எப்.ஐ.ஆர்., 24ம் தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதை இத்தோடு முடித்து விடுங்கள் என்று கூறியதால், இதையே தீர்ப்பாக வழங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

