ADDED : டிச 11, 2024 10:27 AM

கடைசியில் இவருக்கும் ஆசை வந்து விட்டது...' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பற்றி கூறுகின்றனர், டில்லி அரசியல்வாதிகள். அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரரான மம்தா, சமீபகாலமாக அடக்கி வாசிக்கிறார். கோல்கட்டா அரசு மருத்துவக் கல்லுாரியில் பயிற்சி மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கு, அவரை ரொம்பவே பாதித்து விட்டது.
இந்த கொலை சம்பவத்தை கண்டித்து, மேற்கு வங்கத்தில் இன்னும் போராட்டங்கள் நடக்கின்றன. உச்ச நீதிமன்றமும் மம்தா அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. போராட்டம் இன்னும் பெரிதாக வெடித்திருந்தால்,ஆட்சியே பறிபோயிருக்கும். இதனால், மாநில அரசியலில் இருந்து விலகி இருக்க மம்தா முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது.
சமீபத்தில் மம்தா அளித்த ஒரு பேட்டியில், 'எதிர்க்கட்சிகள் தலைமையிலான, 'இண்டியா' கூட்டணிக்கு தலைமையேற்க தயார்...' என தெரிவித்தது, தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 'அடுத்த லோக்சபா தேர்தலுக்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குஇப்போதே மம்தா தயாராகி வருகிறார். மேற்கு வங்க விவகாரத்தை தன் மருமகன் அபிஷேக்கிடம் ஒப்படைத்து விட்டு, தேசிய அரசியலுக்கு தாவப் போகிறார்...' என்கின்றனர், அவரது விசுவாசிகள்.
'மம்தாவுக்கு பிரதமர் பதவி மீது ஆசை வந்து விட்டது. அது நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...' என்கின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.

