ADDED : பிப் 04, 2025 07:00 PM
சென்னை:'ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல், மக்களை ஏமாற்றும், முதல்வர் ஸ்டாலினின் சமூக நீதி வேடம் கலைந்துள்ளது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தெலுங்கானாவில் நடத்தப்பட்ட, ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அம்மாநிலத்தில் 10.08 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 56.33; பட்டியலினத்தவர் 17.43; பழங்குடியினர் 10.45 சதவீதம், 2.48 சதவீத முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற வகுப்பினர் 15.79 சதவீதம் இருப்பது தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில், இட ஒதுக்கீட்டை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ள தெலுங்கானா அரசு, நான்கு நாட்கள் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டிள்ளது. ஆனால், தமிழக அரசோ, சமூக நீதிக்கான போலி முத்திரையை குத்திக் கொண்டு, அதற்காக எதுவும் செய்யாமல், மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. 'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி நடத்தினால், நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளாது' என்ற ஒரே பொய்யை மீண்டும், மீண்டும் கூறி, சமூக நீதிக்கு, தமிழக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இதனால் முதல்வரின் போலி சமூக நீதி வேடம் கலைந்திருக்கிறது.
தெலுங்கானாவில் 150 கோடி ரூபாயில் 1.03 லட்சம் கணக்கெடுப்பாளர்கள், 10 ஆயிரம் மேற்பார்வையாளர்களை வைத்து, 50 நாட்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இதே காலத்தில் 300 கோடி ரூபாயில், தமிழகத்திலும் சாதிக்க முடியும். சமூக நீதியில் உண்மையான அக்கறை இருந்தால், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை, தமிழக அரசு நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.