முதல்வர் மீதான நம்பகத்தன்மை முற்றாக அழிந்து விட்டது: தலைமை செயலக ஊழியர் சங்கம் கோபம்
முதல்வர் மீதான நம்பகத்தன்மை முற்றாக அழிந்து விட்டது: தலைமை செயலக ஊழியர் சங்கம் கோபம்
ADDED : பிப் 06, 2025 01:15 AM

சென்னை: 'ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகள் குழு அறிக்கை அளித்தாலும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியில் அமரப்போகும் அரசால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும்' என, தமிழக தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜனவரி 11ம் தேதி சட்டசபையில் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படாது என்ற தொணியில், ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.
இது முதல்வரின் அறிவிப்பு இல்லை என்றாலும், நிதி அமைச்சர் சட்டசபையில் அறிவித்ததால், தமிழக அரசின் கொள்கை முடிவாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.
இப்போது, ஓய்வூதிய திட்டங்களை ஆய்வு செய்வதற்காக, அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது, அதை உறுதிப்படுத்தியுள்ளது.
முரண்
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அளித்த பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் என்ற, வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாக, அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, அதிகாரிகள் குழு அமைத்தது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. குழு என்றாலே ஒரு விஷயத்தை காலம் கடத்துவதுதான் என்பது அனைவரும் அறிந்தது.
அதுவும் அதிகாரிகள் குழுவிற்கு ஒன்பது மாத கால அவகாசம் வழங்கியிருப்பது, எந்த வகையிலும் பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கை. அதிகாரிகள் குழு அமைப்பது என்பது, முதல்வரின் மீதான நம்பகத்தன்மையை முற்றாக அழித்து விட்டது.
தமிழகத்தில் அமைக்கப் பட்ட எந்தவொரு குழுவும், அறிக்கையை காலவரையறைக்குள் வழங்கியதில்லை. அந்த வகையில், இந்த குழுவும் கண்டிப்பாக கால நீட்டிப்பு கோரி, காலத்தை கடத்தும் என்பதுதான் திண்ணம்.
ஒன்பது மாதங்களுக்குள் அறிக்கை அளித்தாலும், அதை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் தி.மு.க., அரசுக்கு இல்லை.
கொள்கை முடிவு
வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியில் அமரப்போகும் அரசால் மட்டுமே, இந்த பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து, முடிவு எடுக்க முடியும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்து குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை; கொள்கை முடிவு எடுத்தாலே போதும்.
முதல்வர் அமைத்துள்ள அதிகாரிகள் குழுவை உடனடியாக கலைத்துவிட்டு, இனியும் காலம் தாழ்த்தாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.