ADDED : ஜூன் 17, 2025 01:03 AM

ஓசூர்; தமிழக எல்லையில் வர இருந்த வட்ட ரயில்பாதை திட்டம், அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரையால் தடம் மாறியது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை மையமாக கொண்டு, அம்மாநிலத்தின் பல நகரங்களை இணைக்கும் வகையில், 23,000 கோடி ரூபாய் செலவில், 241 கி.மீ., துாரம் வட்ட ரயில்பாதை திட்டத்தை தென்மேற்கு ரயில்வே கொண்டு வர உள்ளது.
இதில், தேவனஹள்ளி, பிரதான பெரிய ரயில் முனையமாக மாற்றப்பட உள்ளது. நிலம் எடுப்பு நடவடிக்கைகளை கர்நாடக அரசும், கட்டுமானங்களை மத்திய அரசும் மேற்கொள்ள உள்ளன.
இந்த வட்ட ரயில்பாதை திட்டம், தமிழக எல்லை வழியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதற்காக, ஓசூர் ஜூஜூவாடியிலிருந்து, பாகலுார் அருகே தேவீரப்பள்ளி வரை 15 கி.மீ., துாரத்துக்கு நிலம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தனியார் சர்வே நிறுவனம், கூகுள் எர்த் வரைபடம் அடிப்படையில், நில அளவீட்டை ட்ரோன் வாயிலாக பதிவு செய்தது.
விவசாய நிலத்தில், 300 மீட்டர் துாரத்திற்கு நிலம் கையகப்படுத்த ஏற்பாடுகள் நடந்தன. இதனால், 1,035 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் எனக்கூறி, தமிழக எல்லை விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், நிலம் கையகப்படுத்தும் முடிவை கைவிட்டு, சர்வே நிறுவனம் நடத்திய நில அளவீட்டை உடனடியாக நிறுத்தக்கூறி, கிருஷ்ணகிரி கலெக்டரிடம் விவசாயிகள் ஜனவரியில் மனு கொடுத்தனர்.
ராஜ்யசபா அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரையிடம், இத்திட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசிடம் வலியுறுத்த கோரி, விவசாயிகள் மனு அளித்தனர். தம்பிதுரை ரயில்வே அமைச்சகத்திடம் பேசினார்.
இந்நிலையில், தமிழகத்தை தவிர்த்து, கர்நாடகாவிற்குள் மாற்று ஏற்பாடுடன் திட்டத்தை நிறைவேற்றவும், வரைபடம் மற்றும் நில அளவீடு பணியை நிறுத்தவும், தென்மேற்கு ரயில்வே இணை தலைமை பொறியாளர் வாயிலாக, அத்திட்ட ஒப்பந்ததாரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த விவசாயிகள், தம்பிதுரையை ஓசூரில் நேற்று சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.
மொத்தத்தில் தமிழக எல்லைக்குள் வரவிருந்த வட்ட ரயில்பாதை திட்டம், தம்பிதுரையால் நின்று போனது. இத்திட்டம் தமிழக எல்லையில் வந்திருந்தால், தமிழகத்துக்கு ஓசூர் வழியாக தர்மபுரி, சேலம் வரை கூடுதல் ரயில் சேவை கிடைக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

