ADDED : ஜன 30, 2025 02:58 AM
சென்னை:நீலகிரியில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக, பொய்யான தகவலுடன் கூடிய அறிக்கை தாக்கல் செய்த, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னீரின் செயலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, நீலகிரியில் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்தியது, தானியங்கி குடிநீர் வினியோக மையங்கள் நிறுவியது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், 93 மையங்களும் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டு இருந்தது.
இதை பார்த்த நீதிபதிகள், 'எந்த மையங்களும் செயல்படவில்லை. கலெக்டர் தவறான தகவலுடன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இ- - -பாஸ் நடைமுறை முறையாக அமலில் இல்லை. இதே நிலை நீடித்தால், வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்படி உத்தரவிட நேரிடும்.
'நீதிமன்ற உத்தரவை மீறி, பிளாஸ்டிக் பொருட்களுடன் பஸ்கள் மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. எந்த பரிசோதனைகளும் நடத்தப்படுவதில்லை' என, கலெக்டரின் அறிக்கைக்கு கண்டனமும், அதிருப்தியும் தெரிவித்தனர்.
மேலும், இவ்விவகாரத்தில் முறையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்றைய தினம் விசாரணைக்கு, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராக உத்தரவிட்டனர்.