'கார்ப்பரேட்கள் குறித்து பேச கம்யூ., வுக்கு அருகதை இல்லை' *ஹிந்து முன்னணி ஆவேசம்
'கார்ப்பரேட்கள் குறித்து பேச கம்யூ., வுக்கு அருகதை இல்லை' *ஹிந்து முன்னணி ஆவேசம்
ADDED : ஏப் 10, 2025 08:54 PM
திருப்பூர்:'தேச மற்றும் ஹிந்து விரோத கருத்துகளுடன் மதுரையில் மா.கம்யூ., மாநாடு நடத்தியுள்ளது; அதை கண்டிக்கிறோம்' என ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
மதுரையில் நடந்த மா.கம்யூ., கட்சியின், 24வது அகில இந்திய மாநாட்டில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். அம் மாநாட்டில் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் குறித்து எதுவும் பேசவில்லை. பேசப்பட்டவை அனைத்தும் ஹிந்து மற்றும் தேச விரோத கருத்துகள் மட்டுமே.
கனடா, அமெரிக்கா, வங்கதேசம் உட்பட நாடுகளில் ஹிந்து கோவில்களும், ஹிந்துக்களும் தாக்கப்பட்டபோது, வாய்மூடி மவுனமாக இருந்த கம்யூ.,கள், மதுரையில் பாலஸ்தீனியர்களுக்காக கண்ணீர் வடித்துள்ளனர்.
மாநாட்டில் கம்யூ., கட்சியின் பாலகிருஷ்ணன் பேசும்போது, கார்ப்பரேட்களுக்கு எதிராகவும், ஆதிக்கவாதத்துக்கு எதிராகவும் தொடர்ந்து போரிடுவோம் என்று கூறியுள்ளார். ஆளும் தி.மு.க.,விடம் நிதி பெற்று, கட்சி அலுவலகம் கட்டி, அதில் கார்ப்பரேட்களுக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் இவர்கள் தான், கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர். இப்படி பேச அவர்களுக்கு அருகதை இல்லை.
கம்யூ., சித்தாந்தத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு, தி.மு.க., மற்றும் திராவிடர் கழகத்தின் ஊதுகுழல் போல, ஹிந்து விரோதம், தேசிய விரோதம் பேசி மாநாட்டை முடித்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

