அ.தி.மு.க - தி.மு.க., இடையே தான் போட்டி: ராஜேந்திர பாலாஜி கணிப்பு
அ.தி.மு.க - தி.மு.க., இடையே தான் போட்டி: ராஜேந்திர பாலாஜி கணிப்பு
ADDED : டிச 24, 2025 06:57 AM

சென்னை: 'தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே தான் போட்டி. மற்ற கட்சிகள் பார்வையாளர்கள்' என, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
சென்னையில் உள்ள, அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் அ.தி.மு.க.,வை எதிர்க்கவோ, எதிர்த்து போட்டியிடவோ, தி.மு.க., தவிர வேறு எந்த கட்சிகளுக்கும் தகுதியில்லை. மற்ற அனைத்து கட்சிகளும் பார்வையாளர்களாக இருக்கின்றன. ஆனால், மற்ற கட்சிகளைப் பார்த்து களத்தில் இல்லாத கட்சிகள் என ஏளனமாக பேசி வருகின்றனர். யார் களத்தில் உள்ளனர்; யார் களத்தில் இல்லை என்பதெல்லாம் வரும் தேர்தல் முடிவுகள் தெரிவித்து விடும்.
வரும் சட்டசபை தேர்தல் விளையாட்டில், முதல் பரிசு அ.தி.மு.க.,வுக்குத்தான் கிடைக்கப் போகிறது. முதல் பரிசு அ.தி.மு.க.,வுக்கு என்றால், இரண்டாம் பரிசு யாருக்கென்ற கேள்வி எழும். சந்தேகமே வேண்டாம். அது, தி.மு.க.,வுக்குதான். தமிழகத்தை அ.தி.மு.க.,வின் இரும்பு கோட்டையாக, பழனிசாமி மாற்றி இருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து பேசி, அ.தி.மு.க.,வின் ஓட்டுகளைப் பெறலாம் என நினைக்கின்றனர். ஆனால், அது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

