நாட்டின் வளர்ச்சி தடம் புரண்டிருக்கும்: நவீன் பட்நாயக்
நாட்டின் வளர்ச்சி தடம் புரண்டிருக்கும்: நவீன் பட்நாயக்
ADDED : மார் 23, 2025 01:30 AM
சென்னை: “தமிழகம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்காவிட்டால், நாட்டின் வளர்ச்சி தடம்புரண்டிருக்கும்,” என, பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும், ஒடிசா மாநில முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, சென்னையில் நேற்று நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில், காணொளி காட்சி வாயிலாக அவர் பேசியதாவது:
மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது, நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான தேசிய திட்டம். இத்திட்டத்துக்கு மத்திய அரசு, பல ஆண்டுகளாக அதிக முன்னுரிமை அளித்தது. தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டு, மக்கள் தொகையை கட்டுப்படுத்தின.
இந்த மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்காவிட்டால், இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் தொகை அதிகரித்திருக்கும்.
இது, நாட்டின் வளர்ச்சியை தடம் மாற செய்திருக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.
எனவே, மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே, தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது. ஒடிசா மக்களின் நலன்களை பாதுகாக்க, பிஜு ஜனதா தளம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் பேசினார்.