குறைந்த ஊதியத்துக்கு திரண்ட கூட்டம் அரசின் முகமூடி கிழிகிறது: அன்புமணி
குறைந்த ஊதியத்துக்கு திரண்ட கூட்டம் அரசின் முகமூடி கிழிகிறது: அன்புமணி
ADDED : நவ 21, 2025 11:52 PM
சென்னை: 'தி.மு.க., அரசின் முகமூடியும், மோசடி வேலையும், கிழியத் துவங்கி விட்டன' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் உள்ள, செருப்பு தயாரிப்பு நிறுவனத்தில், 52 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக, நிறுவன வளாகத்தில், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் கூடியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த தனியார் நிறுவனத்தில், ஊதியம் ஒப்பீட்டளவில் குறைவு தான் என்றாலும், அந்த வேலையையாவது கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், பல்லாயிரம் பேர் திரண்டுள்ளனர்.
இதிலி ருந்தே, தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம், எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை, அறிந்து கொள்ள முடியும். தி.மு.க., அரசின் முதலீடு முகமூடியும், மோசடி வலையும், கிழியத் துவங்கி விட்டன.
வேலை கேட்டு போச்சம்பள்ளியில் திரண்ட இளைஞர் சக்தி, வெகு விரைவில், தி.மு.க., அரசை விரட்டி அடிக்க, பெருமளவில் திரளும். அப்போது, தமிழக இளைஞர்களுக்கு உண்மையாகவே, புதியதோர் தமிழகம் அமையும். அதை பா.ம.க., உறுதி செய்யும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

