ஆட்களே நியமிக்காமல் அடிக்கடி தேர்வு நடத்தும் கொடுமை: கண்ணாமூச்சி காட்டும் கால்நடை பராமரிப்புத்துறை
ஆட்களே நியமிக்காமல் அடிக்கடி தேர்வு நடத்தும் கொடுமை: கண்ணாமூச்சி காட்டும் கால்நடை பராமரிப்புத்துறை
ADDED : நவ 30, 2024 05:37 AM

மதுரை: மொத்த பணியிடத்தில் பாதி காலியாக இருந்தாலும் காலிப்பணியிடத்திற்காக அடிக்கடி தேர்வு நடத்தப்பட்டாலும் ஆட்கள் நியமனம் மட்டும் நடைபெறவில்லை என கால்நடை பராமரிப்புத் துறையினர் புலம்புகின்றனர்.
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் பத்தாண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணிக்காக 2015 முதல் நேர்முகத் தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்படுவதும் பின்னர் ரத்து செய்யப்படுவதுமாக உள்ளது. இன்றுவரை கால்நடை பராமரிப்பு உதவியாளர், கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
திட்டங்கள் மட்டும் அதிகம்
அ.தி.மு.க.,- தி.மு.க., ஆட்சியில் மாறி மாறி கால்நடை துறையில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதை செயல்படுத்துவதற்கு ஆள் பற்றாக்குறை இருப்பதை மட்டும் எந்த அரசும் உணரவில்லை. இந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட புதிய கால்நடை மருந்தகங்கள், கிளை நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன. அதற்கு தேவையான கால்நடை உதவி டாக்டர்களோ, கால்நடை ஆய்வாளர்களோ, பராமரிப்பு உதவியாளர்களோ நியமிக்கவில்லை. அதேபோன்று மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள் போன்ற அமைச்சுப் பணியாளர்களுக்கான பணியிடங்களும் நிரப்பப்படவில்லை.
முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர்களே, காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியையும் செய்ய வேண்டியுள்ளது. மண்டல இணை, துணை, உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக உதவியாளர்களை நியமிக்காததால் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களையே இரண்டு வேலைகளை செய்ய வற்புறுத்துகின்றனர். இரவு காவலர் இல்லாவிட்டால் அந்த வேலையையும் பராமரிப்பு உதவியாளர்களே செய்ய வேண்டியுள்ளது.
பணியிடம் பாதிக்கு மேல் காலி
கால்நடை உதவி டாக்டர்களுக்கான காலிப் பணியிடம் 38, கால்நடை ஆய்வாளர்களுக்கான மொத்த பணியிடம் 2618, காலிப் பணியிடம் 1375, முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர்களுக்கான மொத்த பணியிடம் 183, காலியாக உள்ளது 31, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மொத்த பணியிடம் 4915, காலி பணியிடங்களின் எண்ணிக்கை 2813 ஆக உள்ளது.
திட்டங்களுக்காக மட்டுமின்றி ஏற்கனவே நியமிக்கப்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதையும் முழுமையாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கால்நடை பராமரிப்புத் துறையினர்.