ADDED : மார் 25, 2025 05:45 AM

கோவை; ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுக்குழு கூட்டம், பெங்களூரில் கடந்த 21 முதல் 23 வரை நடந்தது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, கோவையில் ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழக மாநில தலைவர் ஆடல் அரசன் கூறியதாவது:
தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை ஹிந்துக்களுக்கு சாதகமாக இல்லை. கோவில்களில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. காசு கொடுத்தால்தான், சுவாமியை தரிசிக்கும் நிலை உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா நடந்துவரும் சமயத்தில், சங்க கிளைகள் அதிகரித்து வருகின்றன.தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
தமிழகத்தில், 1,100 ஆர்.எஸ்.எஸ்., நேரடி கிளைகள் இருந்தன. தற்போது 4,100 ஆக உயர்ந்துள்ளன.
'தமிழகம் என்றாலே, ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிரானது; தேசத்துக்கு எதிரானது; வழிபாட்டுக்கு எதிரானது; இங்கிருப்போர் யாருக்கும் இறை நம்பிக்கை கிடையாது' என, தவறான தகவல் பரப்புகின்றனர். தமிழகம் என்றால் ஆன்மிக பூமி, தேச நம்பிக்கை அதிகம் உள்ள பூமி. ஆர்.எஸ்.எஸ்.,சுக்கும், ஹிந்து இயக்கங்களுக்கும் ஆதரவான பூமி. இவ்வாறு, அவர் கூறினார்.