கிரைய பத்திரங்களை நீங்களே தயாரிக்கலாம் மாதிரிகளை வெளியிட்டது பதிவுத்துறை
கிரைய பத்திரங்களை நீங்களே தயாரிக்கலாம் மாதிரிகளை வெளியிட்டது பதிவுத்துறை
ADDED : ஏப் 05, 2025 01:41 AM
சென்னை:சொத்து வாங்குவோர், அதற்கான கிரைய பத்திரங்களை தயாரிக்கும் வகையில், அதற்கான மாதிரிகளை, பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
கிரைய பத்திரங்களை தயாரிப்பதில், பெரும்பாலான மக்கள் ஆவண எழுத்தர்களையே நாடுகின்றனர். சில அலுவலகங்களில், சார் - பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வேண்டிய ஆவண எழுத்தர்கள் வாயிலாக தாக்கலாகும் பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன.
வேறு ஆவண எழுத்தர்கள் வாயிலாக தாக்கலாகும் பத்திரங்கள் நிராகரிக்கப்படும் நிலையில், பொதுமக்கள் அதிருப்தி அடைகின்றனர்.
இந்நிலையில், சொத்து வாங்கும் பொதுமக்கள் தங்களுக்கான கிரைய பத்திரத்தை தாங்களே தயாரிக்கலாம். பத்திரப்பதிவுக்கான, 'ஸ்டார் 2.0' மென்பொருளில், இதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பதிவுத்துறை இணையதளத்தில், பொதுமக்களுக்கான நுழைவு வசதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரும்பாலான மக்கள், ஆவண எழுத்தர்களையே நாடும் நிலை உள்ளது.
இதில், சார் - பதிவாளர் அலுவலகங்களில், வெளியாள் நுழைவதை படிப்படியாக தடுக்கும் நடவடிக்கைகளை, பதிவுத்துறை முடுக்கி விட்டுள்ளது.
இதன்படி, பொது மக்கள் எளிதாக கிரைய பத்திரம் தயாரிப்பதற்கான வழிமுறைகளை, பதிவுத் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
புகார்
பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கிரைய பத்திரங்களை பொதுமக்களே தயாரிப்பதற்கான வழிமுறைகள் ஏற்கனவே இருந்தாலும், அதில் சிறு தவறுகள் இருந்தாலும் ஏற்க மறுத்து, சார்- பதிவாளர்கள் நிராகரிப்பதாக புகார் கூறப்படுகிறது.
இதனால், 'ஸ்டார் 2.0 சாப்ட்வேர்' அடிப்படையிலான இணையதளத்தில், கிரைய பத்திரத்தின் வரைவை, எளிதாக தயாரிப்பதற்கான மாதிரிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த இணையதளத்தில், பொதுமக்கள் தங்கள் அடையாள விபரங்களை கொடுத்து, நுழைவு வழியாக உள்ளே செல்லலாம். அங்கு என்ன வகை பரிமாற்றம் என்பதை தெரிவித்தால், அதற்கான மாதிரி ஆவணங்கள் கிடைக்கும்.
அதில் சொத்து குறித்த விபரங்கள், உரிமையாளர், வாங்குபவர் குறித்த விபரங்களை கொடுத்தால், வரைவு கிரைய பத்திரம் தயாராகி விடும்.
நடவடிக்கை
அதில் ஏதாவது மாற்றங்கள் தேவைப்பட்டால், சார் - பதிவாளர் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளலாம். இதன் அடிப்படையில் கட்டணங்கள் செலுத்துவது, 'டோக்கன்' பெறுவது போன்ற பணிகளை, பொதுமக்களே மேற்கொள்ளலாம்.
இதுகுறித்த விபரங்களை, சார் - பதிவாளர் அலுவலக அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும். இவ்வாறு தாக்கலாகும் பத்திரங்களை ஏற்க வேண்டும் என, சார் - பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முறையான காரணம் இன்றி, இத்தகைய பத்திரங்களை ஏற்க மறுக்கும் சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.