ADDED : மே 14, 2026 01:04 AM
சென்னை: 'வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து உள்ளது. இதனால், தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை நிலவரப்படி, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அந்தமான் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று, மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதனால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
