எதிர்பார்த்த மாதிரியே.. ஈரோடு தொகுதியில் தி.மு.க., வெற்றி
எதிர்பார்த்த மாதிரியே.. ஈரோடு தொகுதியில் தி.மு.க., வெற்றி
ADDED : பிப் 08, 2025 11:48 PM

எதிர்பார்த்தது போலவே, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., 90,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை நடந்த இடைத்தேர்தலில், 43,000 ஓட்டுகள் வரை பெற்ற அ.தி.மு.க., இம்முறை போட்டியிடாமல் ஒதுங்கியதால், அக்கட்சி ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும் என நாம் தமிழர் கட்சி எதிர்பார்த்தது. ஆனால், அந்த ஓட்டுகள் கிடைக்காததால், 24,000 ஓட்டுகள் மட்டுமே அக்கட்சி சார்பில் போட்டியிட்ட சீதாலட்சுமியால் பெற முடிந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் இறந்ததை தொடர்ந்து, அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 5ம் தேதி விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது.
தி.மு.க., கூட்டணியில் ஏற்கனவே காங்., சார்பில் போட்டியிட்டு வென்ற இத்தொகுதியை, இம்முறை தி.மு.க., கேட்டு வாங்கி போட்டியிட்டது.
இத்தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வான சந்திரகுமாரை வேட்பாளராக அறிவித்து, தி.மு.க., தேர்தல் பிரசாரம் செய்தது.
புறக்கணிப்பு
'ஆளும் கட்சியினரின் அதிகார பலமும், பண பலமும் தொகுதிக்குள் வலுவாக இருக்கும் என்பதால், எப்படியும் வெற்றி அவர்களுக்கு தான்; ஜனநாயக முறைப்படி நடக்காத தேர்தலை புறக்கணிக்கிறோம்' என்று சொல்லி, தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ஒதுங்கிக் கொண்டன.
ஆனால், தேர்தல் என்றாலே எப்போதும் துணிச்சலுடன் களத்துக்கு வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்கம் போல இடைத்தேர்தலில் போட்டி என அறிவித்து, தன் கட்சி வேட்பாளராக முன்னாள் பேராசிரியை சீதாலட்சுமியை களமிறக்கினார்.
தெரு தெருவாக
'ஈ.வெ.ரா.,வின் மண்ணாக அறியப்பட்டிருக்கும் ஈரோட்டில், அவருக்கான பிம்பத்தை உடைத்து வெற்றி பெறுவேன்' என்ற கோஷத்தோடு சீமான் வேகமாக களமிறங்கினார்.
முன்னதாக, ஈ.வெ.ரா.,வின் கடந்த கால பேச்சுக்களை எடுத்து வைத்து கடும் விமர்சனம் செய்து, தமிழக அரசியலில் பெரும் சலசலப்புகளையும் ஏற்படுத்தினார்.
கூடவே, தேர்தல் பிரசார களத்திலும் ஈ.வெ.ரா., குறித்த கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். அத்துடன், தி.மு.க., அரசின் அவலங்களை தொடர்ச்சியாக பட்டியலிட்டு பேசினார்.
துவக்கத்தில் இருந்தே, 'சீமான் கருத்துக்கு எவ்வித பதிலும் சொல்ல மாட்டோம்' என்று ஒதுங்கிய தி.மு.க., தரப்பு, கடைசி வரை அமைதியாக பிரசாரம் செய்தது.
லோக்கல் அமைச்சர் முத்துசாமியிடம் தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டதுடன், தி.மு.க., தேர்தல் பரபரப்புகளில் இருந்தும் முழுமையாக ஒதுங்கிக் கொண்டது.
அமைச்சர்கள் பட்டாளம், கட்சியின் நிர்வாகிகள், துணை முதல்வர் உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் என யாரும் பிரசாரத்துக்காக, ஈரோடு கிழக்கு தொகுதி பக்கம் போகவில்லை.
ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதியிலேயே ஒரு வாரத்துக்கும் மேலாக தங்கியிருந்து, சீதாலட்சுமிக்காக தெரு தெருவாக பிரசாரம் செய்தார் சீமான்.
ஏற்கனவே தன் கட்சி பெற்ற ஓட்டுகளை காட்டிலும் கூடுதல் ஓட்டுகள் வாங்கி விட்டால், அதுவே வெற்றி என்ற லட்சியத்தோடு, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., ஓட்டுகளை பெறுவதற்காக காய் நகர்த்தினார். அதற்காக, தி.மு.க.,வை மட்டும் முழு வேகத்தில் விமர்சித்தார்.
அவர் எதிர்பார்த்தது போல, கடந்த இடைத்தேர்தலின் போது கட்சிக்கு கிடைத்த ஓட்டு களை விட இம்முறை கூடுதல் ஓட்டுகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ளன. ஆனாலும், டிபாசிட்டை கூட கட்சி வேட்பாளரால் தக்க வைக்க முடியவில்லை. அதற்கு காரணம், அக்கட்சியினர் பெரிதும் எதிர்பார்த்த அ.தி.மு.க., ஓட்டுகள், நாம் தமிழர் கட்சிக்கு முழுமையாக விழவில்லை.
எதிர்பார்த்தது இல்லை
இருந்த போதும், 'தற்போது பெற்ற ஓட்டுகளே நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு சான்று' என்று, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, தோல்விக்கு பின் பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
ஓட்டு எண்ணிக்கையின் துவக்கம் முதல், ஒரே அளவாக ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். உதாரணமாக நான்காவது சுற்றில், 6,014 ஓட்டுகள் பெற்றோம்.
பணத்துக்கு விலை போகாமல், சிந்தித்து மண்ணில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது, நா.த.க.,வால் மட்டுமே முடியும் என நம்பி மக்கள் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்; எங்களுக்கு இது பின்னடைவு இல்லை.
கடந்த முறை நாங்கள் பெற்ற ஓட்டுகளான 10,827ஐ விட தற்போது குறைவாக பெற்றிருந்தால், பின்னடைவு என்று கூறலாம். மக்களை சிந்திக்க வைத்ததே, சீமானுக்கு கிடைத்த வெற்றியாகும். இது, 2026 பொதுத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.
பணம் கொடுத்து, மிரட்டல் விடுத்து, கள்ள ஓட்டுகள் போட்டதையும் கடந்து, மக்கள் யாருக்கும் விலை போகாமல் நா.த.க.,வுக்கு ஓட்டுகள் போட்டதே மாற்றத்துக்கான புரட்சி தான். ஈ.வெ.ரா.,வை விமர்சித்ததால், ஓட்டு குறைந்தது என காரணம் கூற இயலாது.
தொடர் தோல்வியை நா.த.க., பெற்றாலும், ஓட்டுகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வதை வெற்றியாகவே பார்க்கிறேன்.
கடந்த 2016ல், 2,000 ஓட்டுகள் பெற்றோம். தற்போது, 24,000 ஓட்டு களுக்கு மேல் பெற்றுள்ளதே வெற்றி. மக்கள் எங்களுக்கு கொடுத்த அங்கீகாரம். அதே நேரம், நாங்கள் எதிர்பார்த்த ஓட்டுகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு சீதாலட்சுமி கூறினார்.
- நமது நிருபர் -