கூகுள் மேப் வழிக்காடுதல் படி நடைபாதையில் கார் இயக்கிய டிரைவர்
கூகுள் மேப் வழிக்காடுதல் படி நடைபாதையில் கார் இயக்கிய டிரைவர்
ADDED : ஜன 29, 2024 04:30 PM

கூடலூர்: கூடலூரில், கூகுள் மேப் வழிகாட்டுதல் படி, நடைபாதையில் டிரைவர் கார் ஓட்டிய சம்பவத்தில், கர்நாடக சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்.
இந்தியாவில், வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் கூகுள் மேப், வழிகாட்டுதலை பயன்படுத்தி, அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக சென்று வருகின்றனர். ஆனால், சில இடங்கள், அவை காட்டும் வழி தவறாகி ஆபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இது போன்ற சம்பவம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடந்துள்ளது.
கர்நாடக பெங்களூரை சேர்ந்த 5 பேர், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு, மாலை கர்நாடக செல்வதற்காக, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக, கூடலூர் நோக்கி வந்தனர். இச்சாலையில், போக்குவரத்து காரணமாக, மாற்று வழி இருந்தால், செல்லலாம் என்பதை கருத்தில் கொண்டு, கூகுள் மேப்பை பயன்படுத்தி காரை ஓட்டி வந்தனர்.
கூடலூர், ஹெல்த்கேம் அருகே, தபால் நிலையம் அருகே, கூகுள் மேப் காட்டிய இணைப்புச் சாலையில், போக்குவரத்து நெரிசல் தவிர்த்து செல்ல காரை இயக்கி உள்ளனர். அச்சாலையில் சிறிது தூரம் பயணித்த போது, கூகுள் மேப் காட்டி சிமெண்ட் சாலையில் படிகட்டுகள் இருப்பதை அறியாமல், ஓட்டுனர் காரை திருப்பி உள்ளார்.
படிக்கட்டுகளில் கார் சென்றபோது, அதிர்ச்சி அடைந்த டிரைவர் சுதாகரித்துக் கொண்டு, காரை படிக்கட்டுகளில் நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, காரில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள், சிமெண்ட் கற்களை பயன்படுத்தி, காரை சாலைக்கு கொண்டு வர உதவினர். தொடர்ந்து காரில் வந்தவர்கள் கர்நாடகா நோக்கி சென்றனர். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க, கூகுள் மேப்பில் உள்ள தவறுகளை சரி செய்ய வேண்டும்' என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.