ADDED : ஜூன் 19, 2025 02:53 AM
சென்னை:திருத்துறைப்பூண்டி பவ அவுஷதீஸ்வரர் கோவிலில், 15 ஆண்டுகளுக்கு முன் திருடுபோனது மரகத லிங்கமா, இல்லையா என்ற சந்தேகத்திற்கு, எழும்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பதில் கிடைத்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பவ அவுஷதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த, 2009ல், ஒரு கிலோ எடை உள்ள, 1.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பச்சை நிற மரகதலிங்கம், 20,000 ரூபாய் மதிப்புள்ள, திருமாங்கல்யம் எனப்படும் இரண்டு தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது குறித்து, கோவில் செயல் அலுவலர் கனகசபை, திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதே ஆண்டு அக்., 25ல், சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஒன்பது பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, திருடு போன மரகதலிங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு, இரு தினங்களுக்கு முன், சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிபதி கோதண்டராஜ் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், தஞ்சாவூர் மாவட்டம், கண்டிதம்பேட்டையை சேர்ந்த மெல்வின் சகாயராஜ், 28, நாகபட்டினம் மாவட்டம், பெரிய குத்தகை பகுதியை சேர்ந்த வைத்திலிங்கம், 61, மயிலாடுதுறை மாவட்டம், கொரநாடு பகுதியை சேர்ந்த ராஜா, 24, ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 35,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மரகதலிங்கம் தானா
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், 'போலீசார் எங்களிடம் இருந்து பறிமுதல் செய்தது மரகதலிங்கமே இல்லை. பொய் வழக்குப்பதிவு செய்து விட்டனர். ஹிந்து அறநிலையத்துறை நகை மதிப்பீட்டாளர் சுப்பிரமணியன், போலீசார் பறிமுதல் செய்தது மரகதலிங்கம் இல்லை என, அறிக்கை தாக்கல் செய்துள்ளார்' என, வாதாடினர்.
இதனால், திருடு போனது மரகத லிங்கமா, இல்லையா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு நீதிபதிஉத்தரவில் பதில் கிடைத்துள்ளது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில், 36 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளனர். ஹிந்து அற நிலையத் துறை நகை மதிப்பீட்டாளர் சுப்பிரமணியன், 'போலீசார் கைப்பற்றிய பச்சை நிற லிங்கத்தை ஆய்வு செய்தேன். நான் ஆய்வு செய்தது மரகத லிங்கமே இல்லை. அது 'ஸ்லேடு ஸ்டோன்' எனப்படும் அரிய வகை கல்லில் உருவாக்கப்பட்டது' என, சாட்சியம் அளித்துள்ளார்.
இந்த பச்சை நிற லிங்கம் குறித்த, மறு மதிப்பீடுகளை ஆய்வு செய்த போது, 1956ம் ஆண்டு முதல் மதிப்பீடு செய்யும்போதே, பச்சை நிற ஸ்லேடு ஸ்டோன் லிங்கம் தான் கோவிலில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த லிங்கம், 1990ல் மறுமதிப்பீடு செய்யும் போது மரகதலிங்கம் என, சொல்லப்பட்டுள்ளது. புகார்தாரரும் அதையே பதிவு செய்துள்ளார். கோவிலில் திருடப்பட்ட லிங்கத்தை தான் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். எனவே, எதிரிகள் தரப்பில் முன் வைத்துள்ள வாதம் அடிப்படை முகாந்திரமற்றது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன் வாயிலாக, மரகத லிங்கம் சர்ச்சைக்கு முடிவு கிடைத்துள்ளது.

