தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் அமலாக்கத்துறையும் சி.பி.ஐ.,யும் உறக்கத்தில் உள்ளன
தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் அமலாக்கத்துறையும் சி.பி.ஐ.,யும் உறக்கத்தில் உள்ளன
ADDED : மார் 18, 2024 01:12 AM

ராஜ்யசபா சுயேச்சை எம்.பி., கபில் சிபல்: தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.,யும் உறக்கத்தில் உள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஏதாவது நடந்திருந்தால் களத்தில் இறங்கியிருப்பர். எனவே, உச்ச நீதிமன்றமே இதில் சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும்.
டவுட் தனபாலு: தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பெரிய அளவில் ஆதாயம் அடைந்திருப்பது, பா.ஜ.,வும், காங்கிரசும் தான்... உங்களுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி தராம கடுக்கா கொடுத்த காங்கிரசை கோர்த்து விடவே, சிறப்பு விசாரணை குழுவை கேட்குறீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
முதல்வர் ஸ்டாலின்: கடந்த, 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே, மத்திய, பா.ஜ., அரசு, இந்தியாவின் மதச்சார்பின்மை தன்மையை சீர்குலைத்து, சகிப்பின்மையை வளர்த்து, முஸ்லிம் சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் போன்ற, இந்திய அரசியல்அமைப்பு சட்டத்துக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை சட்டப்பூர்வமாக்க வழிவகுக்கிறது.
டவுட் தனபாலு: கடந்த, 10 ஆண்டு, பா.ஜ., ஆட்சியில, நாட்டுல எங்கயும் மதக்கலவரங்கள் நடக்கலையே... நீங்க குறிப்பிடும், குடியுரிமை திருத்த சட்டத்தை, முஸ்லிம் தலைவர்கள் பலரும் வரவேற்றிருக்காங்களே... அதனால, தேர்தலுக்காகவே, பா.ஜ., அரசை குற்றம் சாட்டுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
பிரதமர் நரேந்திர மோடி: தி.மு.க., - காங்கிரஸ் தலைவர்கள், பெண்களின் பெயரால் அரசியல் செய்கின்றனர்; பெண்கள் மீது அக்கறை இருப்பதாக காட்டி ஏமாற்றுகின்றனர். நாங்கள், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்த போது, அதை ஆதரிப்பதற்கு பதிலாக, தி.மு.க., தலைவர்கள் கேள்வி எழுப்பினர். தி.மு.க.,வும், காங்கிரசும் பெண்களுக்கு எதிரானவர்கள்.
டவுட் தனபாலு: எல்லா கட்சிகளுமே, பெண்களுக்கு சம உரிமை தருவதாக வாய் வார்த்தையாகத் தான் பேசுகின்றன... தங்கள் கட்சி வேட்பாளர் பட்டியலில் கூட, பெண்களுக்கு, 10 சதவீதம் கூட வாய்ப்பு வழங்கலையே... மகளிருக்கு சம உரிமை தருவதில், அரசியல் கட்சிகளுக்கு நிஜமான அக்கறை இல்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!

