ADDED : ஜூலை 14, 2025 02:29 AM

முருகப்பெருமானின் படை வீடுகளில் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலையின் அடிவார பாறையில் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய ஐந்து மூலவர்களின் திருவுருவங்கள் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐந்து மூலவர்கள் ஒருங்கே அமைந்து சிறப்பு பெற்ற திருத்தலம் திருப்பரங்குன்றம். சுப்பிரமணிய சுவாமியின் திருமண தலம் என்ற சிறப்பும் உண்டு.
இத்தலத்தில் வேண்டுவோருக்கு வேண்டும் பாக்கியங்களை முருகப்பெருமான் அருள்கிறார். இங்கு அறங்காவலர் குழுத் தலைவராக இருப்பது எம்பெருமான் அருளிய பாக்கியம்.
அறங்காவலர்கள் குழு பதவி ஏற்ற பின்பு எனது முயற்சியில் ரோப் கார் அமைக்க அமைச்சர் மூர்த்தி மூலமாக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தேன். ஆரம்ப கட்டப் பணிகள் முடிந்து டெண்டர் பணிகளும் முடிந்து விரைவில் பணிகள் துவங்க உள்ளது. இதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
உப கோயிலான மாம்பலம்மன் கோயிலில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல கன்னிமார் கோயில், பால் சுனை கண்ட சிவபெருமான் கோயில்களுக்கும் முதல்முறையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகளில் மூலஸ்தானத்தில் கல்கம் மருந்து சாத்தும் அருட்பணியும் எங்கள் குடும்பம் சார்பில் செய்துள்ளோம். லட்சுமி தீர்த்த குளம் சீரமைப்பு, கோயிலுக்கென தனி போலீஸ் ஸ்டேஷன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள சேஷம், அன்னம் மர வாகனங்கள் வெள்ளி வாகனங்களாக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
அரசு சார்பில் கோயிலில் இலவச திருமண திட்டத்தின் கீழ் 14 திருமணங்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு மணமக்களுக்கும் தலா 4 கிராம் தங்கத் தாலி, ரூ. 3லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை நானும், கணவர் பாலாஜியும் எங்கள் செலவில் வழங்கியுள்ளோம்.
கோயில் வளாக திருக்குளத்தில் 32 அடி உயர வேல் அமைக்கப்பட உள்ளது. மலையில் இருந்த பழைய 'ஓம்' விளக்கு பழுதடைந்ததால், வேலுடன் பெரிய 'ஓம்' விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. எங்களது பதவி காலத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளர்ச்சிக்கும், பக்தர்களின் வசதிக்கும் உழைக்க காத்திருக்கிறோம்.
-சத்யபிரியா பாலாஜி
அறங்காவலர் குழு தலைவர்