சட்டசபை கூட்டத்தொடர் துவக்கம்; உரையை வாசிக்காமல் வெளியேறிய கவர்னர்!
சட்டசபை கூட்டத்தொடர் துவக்கம்; உரையை வாசிக்காமல் வெளியேறிய கவர்னர்!
UPDATED : ஜன 06, 2025 10:42 AM
ADDED : ஜன 06, 2025 09:34 AM

சென்னை: ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜன.,06) காலை 9:30 மணிக்கு கூடியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த உரையை சபாநாயகர் வாசித்து வருகிறார்.
புத்தாண்டில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று (ஜன.,06) காலை 9:30 மணிக்கு, சட்டசபை கூட்ட அரங்கில் துவங்கியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே,
தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய கீதம் பாட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, கவர்னர் ரவி கூட்டத்தொடரை புறக்கணித்தார். ,இதைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு அந்த உரையை வாசித்து வருகிறார்.
முன்னதாக, சட்டசபைக்கு வந்த கவர்னர் ரவிக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கவர்னர் ரவியை சபாநாயகர் அப்பாவு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
கடந்த 2023 சட்டசபை கூட்டத்தில், அரசு தயாரித்து அளித்திருந்த கவர்னர் உரையில் சில வாசகங்களை தவிர்த்தும், சில வாசகங்களை சேர்த்தும், கவர்னர் உரையாற்றினார். 'கவர்னர் தவிர்த்த வாசகங்களுடன், கவர்னர் உரை சட்டசபை குறிப்பில் இடம் பெறும். உரையில் இல்லாமல் கவர்னர் பேசியவை இடம் பெறாது' என, முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதனால் கோபம் அடைந்த கவர்னர், சட்டசபை கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே, சபையிலிருந்து வெளியேறினார். கடந்த ஆண்டு சட்டசபையில் உரை நிகழ்த்த வந்த கவர்னர், தன் உரையின் முதல் பக்கத்தில் உள்ளதை படித்து விட்டு, சில கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.