வெட்டவெளிச்சமான தி.மு.க., - பா.ஜ., உறவு: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
வெட்டவெளிச்சமான தி.மு.க., - பா.ஜ., உறவு: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
UPDATED : ஆக 18, 2024 04:49 PM
ADDED : ஆக 18, 2024 04:45 PM

கோவை: தி.மு.க., பா.ஜ., இடையிலான உறவு வெட்ட வெளிச்சமாகி உள்ளது என அதிமுக., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.
கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் இ.பி.எஸ்., கூறியதாவது: அதிமுக.,வால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டவை தான். அந்த அணை உறுதியாக உள்ளதாக உச்சநீதிமன்றமே கூறிவிட்டது.
ஒவ்வொரு வருடமும் கவர்னர் தேநீர் விருந்து அளித்து வருகிறார். தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும். தேநீர் விருந்து விழாவை புறக்கணிப்பதாக தி.மு.க., அறிவித்த நிலையில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறோம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தெரிவித்தார். இதனையடுத்து தி.மு.க., பா.ஜ., உறவு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாணய வெளியீட்டு விழாவிற்கு ராகுலை அழைக்காதது ஏன் ?
திமுக., பா.ஜ., இடையே ரகசிய உறவு உள்ளது என முன்பிருந்து கூறி வருகிறோம். இது தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது. நாங்கள் பா.ஜ., அணியில் இருந்த போது கூட பா.ஜ., தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை. தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தி.மு.க.,வில் இணைந்துவிட்டன. அவர்களுக்கு என எந்த தனித் தன்மையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

