போர் பதற்றத்தால் சென்னை திரும்பிய விமானம் மீண்டும் லண்டன் சென்றது
போர் பதற்றத்தால் சென்னை திரும்பிய விமானம் மீண்டும் லண்டன் சென்றது
ADDED : ஜூன் 23, 2025 04:11 AM
சென்னை: மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால், சென்னை திரும்பிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணியர் விமானம், மீண்டும், 247 பயணியருடன் லண்டன் புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து லண்டன் செல்லும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணியர் விமானம், நேற்று காலை 6.24 மணிக்கு, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதில், 247 பயணியர் உட்பட, 262 பேர் பயணித்தனர். விமானம் பெங்களூரை கடந்து, கடல் வழியே லண்டன் நோக்கி சென்ற போது, ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்த துவங்கியது.
இதனால், மத்திய கிழக்கு நாடுகள் அருகே, வான்வழி எல்லை மூடப்பட்டிருப்பதாக, விமானிக்கு அவசர தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் அவர், லண்டன் மற்றும் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்ட போது, பாதுகாப்பு கருதி சென்னைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணியர் விமானம், நேற்று காலை 10.00 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.
விமானத்தில் இருந்த பயணியர் கீழே இறக்கப்பட்டு, ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். சிறிது நேரத்தில், மத்திய கிழக்கு பகுதியில், வான்வழி மீண்டும் திறக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், 262 பேருடன் நேற்று காலை 11.50 மணிக்கு, சென்னையில் இருந்து, மீண்டும் லண்டன் புறப்பட்டு சென்றது.