ADDED : பிப் 16, 2025 02:28 AM

தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சி பகுதியில், தெருவில் ஹாயாக உலா வந்த காட்டெருமை பற்றி தகவல் கிடைத்து, வனத்துறையினர் அதை தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி ஒன்றாவது வார்டு, சுங்கான்திடல், கோடியம்மன் கோவில், மாரியம்மன் பகுதியில் காட்டெருமை ஒன்று நேற்று முன்தினம் மாலை சுற்றிக்கொண்டு இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தஞ்சாவூர் வனச்சரக அலுவலர் ரஞ்சித், வனவர் இளையராஜா, ரவி, மணிமாறன் ஆகியோர் காட்டெருமை குறித்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு சிக்கவில்லை. நேற்று காலை, காட்டுத்தோட்டம், தளவாய்பாளையம் பகுதிகளிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சில இடங்களில் காட்டெருமையின் கால் தடங்களை கண்டறிந்தனர்.
வனச்சரக அலுவலர் ரஞ்சித் கூறியதாவது:
இந்த காட்டெருமை மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து, கிழக்கு தொடர்ச்சி மலையான திருச்சி, பச்சைமலை, அரியலுார் மலைப்பகுதி வழியாக, கொள்ளிடம் ஆற்றுப்படுகை வழியாக நம் பகுதிக்கு வந்திருக்கலாம்.
சில மாதங்களுக்கு முன் மயிலாடுதுறையில் சிறுத்தை ஆற்றுப்படுகை வழியாகதான் வந்தது. காட்டெருமை குறித்து திவீரமாக கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.