ADDED : மார் 12, 2024 12:56 AM

சென்னை: சென்னை மயிலாப்பூர் தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜலட்சுமி. இவர் பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்தார். லோக்சபா தேர்தலில், தென்சென்னை தொகுதியில் போட்டியிட, ராஜலட்சுமி நேற்று முன்தினம் இரவு பன்னீர்செல்வத்திடம் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று சென்னை தி.நகர் கமலாலயத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தார்.
அவருக்கு, மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷண் ரெட்டி மற்றும் பா.ஜ., பொறுப்பாளர் அரவிந்த் மேனன் வாழ்த்து தெரிவித்ததுடன், உறுப்பினர் அடையாள அட்டையை அண்ணாமலை வழங்கினார்.
பின், ராஜலட்சுமி அளித்த பேட்டி:
கடந்த 25 ஆண்டுகளாக ஜெயலலிதா தலைமையை ஏற்று பயணித்தேன். பின், பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று பயணித்தேன்.
தற்போது, பிரதமர் மோடியின் செயல்களால் ஈர்க்கப்பட்டு, பா.ஜ.,வில்இணைந்திருக்கிறேன். தி.மு.க., அழிந்து கொண்டிருந்தது; அது, ஒரு கட்சியே இல்லை.
அண்ணாமலை அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றி வருகிறார். அ.தி.மு.க.,வின் பல முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால், அ.தி.மு.க.,வில் இணையவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பின், தி.மு.க.,வின் ஒரு கிளையாக அ.தி.மு.க., செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

