ஆசிரியர் சென்ற காரை மறித்து வழிப்பறி: சிக்கியது கும்பல்
ஆசிரியர் சென்ற காரை மறித்து வழிப்பறி: சிக்கியது கும்பல்
ADDED : பிப் 20, 2025 02:11 AM
தேனி:தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியரின் காரை மறித்து, அவரை தாக்கி, அவரிடம் இருந்த, 7.5 லட்சம் ரூபாயை பறித்து சென்ற எட்டு பேர் கும்பல் போலீசாரிடம் சிக்கியது.
தேனி, மின் அரசு நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 49, கம்பம் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர்.
நேற்று, அல்லிநகரத்தில் இருந்து, மின் அரசு நகர் நோக்கி காரில் சென்றார். துணிப்பையில், 7.5 லட்சம் ரூபாய் வைத்திருந்தார்.
உடன் வந்த நண்பர் திண்டுக்கல் -- குமுளி ரோடு, போடி விலக்கில் இறங்கிச் சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர், தன்னை பள்ளி அருகே இறக்கி விடுமாறு கேட்டார். அவரை ராமகிருஷ்ணன் காரில் ஏற்றிக் கொண்டார்.
தனியார் பள்ளி அருகே மற்றொரு காரில் வந்த ஏழு பேர் கும்பல், ராமகிருஷ்ணன் காரை வழிமறித்தது. அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ராமகிருஷ்ணனை தாக்கினர்.
காரில் வந்த நபர், பணப்பையை எடுத்துக் கொண்டு அந்த கும்பலுடன் சேர்ந்து, காரில், போடி நோக்கி தப்பி சென்று விட்டார்.
ராமகிருஷ்ணன் புகாரில், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
பின், போடி போலீசாருக்கு தகவல் அளித்து, காரில் இருந்த எட்டு பேர் கும்பலை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.