சிறுவன் கடத்தலுக்கு பெண் போலீஸ் காரணம் பெண்ணின் தந்தை வாக்குமூலம்
சிறுவன் கடத்தலுக்கு பெண் போலீஸ் காரணம் பெண்ணின் தந்தை வாக்குமூலம்
ADDED : ஜூலை 09, 2025 11:47 PM
சென்னை:'முன்னாள் போலீஸ் மகேஸ்வரி வகுத்து தந்த திட்டத்தின்படிதான் சிறுவனை கடத்தினோம்' என, பெண்ணின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ், 22. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ, 21, ஆகியோர் காதல் திருமணம் செய்தனர்.
இந்த ஜோடியை பிரிக்க, தனுஷின், 17 வயது சகோதரரை கடத்தியது தொடர்பாக, பெண்ணின் தந்தை வனராஜ், பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் மகேஸ்வரி உள்ளிட்ட ஐந்து பேர் கைதாகி உள்ளனர்.
இவர்களை, சி.பி.சி.ஐ.டி., போலீசார்  காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
வனராஜ் அளித்துள்ள வாக்குமூலம்:
என் மகள், வேறு ஜாதியைச் சேர்ந்த வாலிபரை காதல் திருமணம் செய்ததை, மகேஸ்வரியிடம் தெரிவித்தேன். அவர் தான் என் மகளை, என்னுடன் எப்படியாவது சேர்த்து விடுவதாக உறுதி அளித்தார்.
தனுைஷ கடத்தி, தேனிக்கு அழைத்துச் சென்று விட்டால், என் மகள் வீட்டிற்கு வந்து விடுவார் என, மகேஸ்வரி தான் திட்டம் போட்டு கொடுத்தார்.
அதன்படி, ஜூன் மாதம், 7ம் தேதி, இரவு 12:15 மணிக்கு தனுஷ் வீட்டிற்குச் சென்றோம். அங்கு அவரும், என் மகளும் இல்லை.
இதனால், மாடியில் துாங்கிக்கொண்டு இருந்த, தனுஷ் சகோதரரான, 17 வயது சிறுவனை கடத்தினோம்.
இது போலீசாருக்கு தெரிந்து விட்டதால், ஏ.டி.ஜி.பி., ஜெயராம் காரில் அழைத்துச் சென்று, பேரம்பாக்கம் பஸ் நிலையம் அருகே சிறுவனை இறக்கி விட்டு விட்டோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துஉள்ளார்.

