தமிழகத்தில் ஏழாவது முறையாக ஆட்சி பிடிப்பதே இலக்கு!: ஸ்டாலின்
தமிழகத்தில் ஏழாவது முறையாக ஆட்சி பிடிப்பதே இலக்கு!: ஸ்டாலின்
UPDATED : டிச 23, 2024 04:04 AM
ADDED : டிச 22, 2024 11:17 PM

சென்னை: ''தமிழகத்தில் ஏழாவது முறையாக, ஆட்சியை பிடிப்பதே நம் இலக்கு. சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் நம் கூட்டணி வெல்லும்,'' என, தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் பேசினார்.
சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில், அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தான் உள்ளன. ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் நம் இலக்கு. சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் நம் கூட்டணி வெல்லும்.
தொடர் வெற்றி
இந்த நம்பிக்கைக்கு நீங்கள் தான் ஆணிவேர். களத்தில் நாம் கொடுக்கப் போகும் உழைப்பே, நம் வெற்றியை உறுதி செய்யும். எத்தனை படைகள் வந்தாலும், அவர்கள் எத்தனை பெரிய திட்டங்களோடு வந்தாலும், அவர்களின் வியூகங்களை முறியடிக்கும் கருணாநிதியின் படை என்னிடம் இருக்கிறது.
இப்போது, நாம் அமைத்திருக்கும் ஆட்சியும் எளிதாக அமைந்து விடவில்லை. ஒரு முறை நாம் எதிர்க்கட்சியாக கூட வரவில்லை. ஆனாலும், சோர்ந்து விடவில்லை. கடுமையான உழைப்பால் மக்களின் நம்பிக்கையை பெற்று, ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சி பொறுப்பேற்றோம்.
கடந்த மூன்றரை ஆண்டு களாக, ஓயாமல் உழைக்கும் நமக்கு உற்சாகத்தை தருவது, தொடர் வெற்றிகளே. அதற்கு காரணம், தமிழக மக்களும், நம் கூட்டணி கட்சியினரும் தான். 2019ல் கொள்கை கூட்டணியாக சேர்ந்தோம்.
நம் கூட்டணிக்கு எதிராக, பலரும் அரசியல் கணக்கு போடுகின்றனர். அவர்கள் போடும் கணக்கெல்லாம் தப்பு கணக்காகும். வெற்றி கணக்கு நம் கூட்டணிக்கே.
நம்மை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம், ஓட்டுகளை பிரிக்க தனித்தனியாக வந்தாலும் சரி, மொத்தமாக சேர்ந்து வந்தாலும் சரி, 2026 தேர்தலில் தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெறும்.
தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால், அது எளிதாக நடக்காது. அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்; ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.
கற்பனை கோட்டை
எதிர்க்கட்சித் தலைவர், ஒரு ஓட்டு சதவீத கணக்கை சொல்கிறார். காற்றில் கணக்கு போட்டு, கற்பனையில் கோட்டை கட்டும் பழனிசாமி, கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஓட்டு ஒரு சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், 20 தொகுதி களில் போட்டியிட்ட அ.தி.மு.க., 19.4 சதவீத ஓட்டுகள் வாங்கியது.
இந்த ஆண்டு லோக்சபா தேர்தலில், 34 தொகுதிகளில், 20.4 சதவீத ஓட்டுகளை பெற்றது. கூடுதலாக, 14 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க., 32.98 சதவீத ஓட்டுகளை பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், 12.58 சதவீத ஓட்டுகளை குறைவாக பெற்றுள்ளது. எளிமையாக சொன்னால், 2019-ல் சராசரியாக ஒரு தொகுதிக்கு, 4.16 லட்சம் ஓட்டுகள் வாங்கிய அ.தி.மு.க., -2024ல் 2.61 லட்சம் ஓட்டுகள் தான் வாங்கி இருக்கிறது.
பொய் கணக்கு
ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக, 1.5 லட்சம் ஓட்டுகளை இழந்துள்ளது. மக்களால் ஓரம் கட்டப்பட்ட பழனிசாமி, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு சாதாரண கூட்டல், -வகுத்தல் கணக்கே தெரியாது என்று நம்பி, பொய் கணக்கை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
அவர் சொன்ன கணக்கை, அடிப்படை அறிவுள்ள அ.தி.மு.க.,வினரே கேட்டு சிரிக்கின்றனர்.
பழனிசாமி என்ன கத்தினாலும், அவரது துரோகங்களும், குற்றங்களுமே, அனைவருக்கும் ஞாபகம் வரும். பிரதமரை எதிர்த்து பேசும் துணிவு கிடையாது.
இவர்கள் கள்ளக் கூட்டணியாக வந்தாலும் சரி, நேரடி கூட்டணி அமைத்து வந்தாலும் சரி, தமிழகத்திற்கு பேராபத்தானவர்கள் என்று மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். மகளிர் நம் ஆட்சி மேல் பெரிய மதிப்பு வைத்துஉள்ளனர்.
அதை முழுமையாக, நமக்கு ஆதரவான ஓட்டுகளாக மாற்ற வேண்டும். புதிய வாக்காளர்களான இளைஞர்களின் நம்பிக்கையையும் -பெற வேண்டும். அதற்கு, அவர்களுக்கான மொழியில் பேச வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

