ADDED : ஜூன் 23, 2025 03:50 AM

கோவை : காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கோவையில் அளித்த பேட்டி:
பா.ஜ., தலைவர்கள் கூறுவது போல், தி.மு.க., அணியில் எந்த ஓட்டையும் இல்லை. இக்கூட்டணி சிதற வேண்டும் என்பது அவரக்ள் எண்ணம். அதெல்லாம் ஒருநாளும் ஈடேறாது.
கூட்டணி என்றால், அதில் இருக்கும் கட்சிகளுக்கு சிறுசிறு பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதை பேசி தீர்த்துக்கொள்ள முடியும்.
யாரெல்லாம் பா.ஜ.,வுடன் கூட்டணி சேருகின்றனரோ, அவர்களை தமிழக மக்கள் புறக்கணிப்பர். தமிழ் கடவுள் முருகனும் அவர்களை புறக்கணிப்பார்.
தமிழ் கடவுள் முருகன் இருப்பது உண்மையானால், 2026 தேர்தலில் பா.ஜ., கூட்டணியை சூரசம்ஹாரம் செய்வார். அயோத்தியிலேயே தோற்ற கட்சி தான் பா.ஜ.,
மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தவரை, இருமொழிக் கொள்கை தான் இருந்தது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்படுகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நெற்றியில் பூசிய திருநீற்றை ஏன் அழித்தீர்கள் என திருமாவளவனை கேட்கின்றனர். திருநீறு வைத்ததால், நெற்றியில் எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம் அல்லது ஏதாவது உபாதை இருந்திருக்கலாம்.
ஆனால், வைத்த திருநீறை வேண்டுமென்றே அழித்தால் தான் அது இரட்டை வேடம். அப்படி செய்யாத போது, அதைவைத்து அரசியல் செய்யக்கூடாது. இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

