குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான செலவுத்தொகை இன்ஸ்பெக்டர்களுக்கு 6 மாதங்களாக தராமல் இழுத்தடிப்பு நிதி இல்லை என அரசு கைவிரிப்பு
குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான செலவுத்தொகை இன்ஸ்பெக்டர்களுக்கு 6 மாதங்களாக தராமல் இழுத்தடிப்பு நிதி இல்லை என அரசு கைவிரிப்பு
ADDED : ஜூன் 17, 2025 12:35 AM
மதுரை: குண்டர் சட்டத்தில் கைது செய்ய 5 புத்தகங்களை தயார் செய்வது உள்ளிட்ட செலவுத்தொகை ரூ.12 ஆயிரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு 6 மாதங்களாக தரப்படவில்லை. அந்த செலவுகளை ஈடுகட்ட 'ஸ்பான்சரை' அணுக வேண்டிய கட்டாயத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு வன்செயல் தடுப்புச்சட்டம் 1982(குண்டர் சட்டம்) கொண்டு வரப்பட்டது. வன்கொடுமை, கள்ளச்சாராயம், ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்காக இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தில் கைதானால் ஓராண்டு வரை சிறையில் இருக்க வேண்டும். 2004ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது திருட்டு 'விசிடி' விற்றவர்கள், 2006ல் மணல் கடத்தியவர்கள், நிலஅபகரிப்பு செய்தவர்கள் மீதும் இச்சட்டம் பாய்ந்தது.
2012ல் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 'ஒரு வழக்கு இருந்தாலே குற்றத்தின் தன்மையை கருதி குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம்' என அறிவித்து, சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். இதனால் ஆண்டுதோறும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குற்றங்களை தடுக்க ஒவ்வொரு இன்ஸ்பெக்டரும் மாதத்திற்கு குறைந்தது 2 பேரையாவது குண்டர் சட்டத்தில் கைது செய்ய நிர்பந்தப்படுகின்றனர்.
இச்சட்டத்தில் ஒருவரை கைது செய்ய ரூ.12 ஆயிரம் செலவாகிறது. கைது செய்யப்படுபவரின் பின்னணியை தெரிவிக்க 5 புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, உள்துறை செயலர், டி.ஜி.பி., உள்ளிட்டோருக்கு வழங்க வேண்டும். தவிர அறிவுரை குழுமம், சிறை, கமிஷனர், எஸ்.பி., உள்ளிட்டோருக்கும் வழங்க புத்தகங்கள் தயாரித்து கொடுக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தால் அங்கு 3 புத்தகங்கள் வழங்க வேண்டும். ஸ்டேஷனில் ஒரு புத்தகம் ஆவணப்படுத்த வைத்துக்கொள்வர்.
இதற்கான செலவுத்தொகையை அந்தந்த எஸ்.பி., கமிஷனர் அலுவலகம் மூலம் அரசுக்கு விண்ணப்பித்து குறிப்பிட்ட நாட்களில் இன்ஸ்பெக்டர்கள் பெற்றுக்கொள்வர். கடந்த 6 மாதங்களாக சில மாவட்டங்களில் 'அரசிடம் நிதிநிலை' எனக்கூறி செலவுத்தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் 'ஸ்பான்சரை' அணுகி செலவுகளை சில இன்ஸ்பெக்டர்கள் ஈடுகட்டி வருகின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால் 'சம்திங்' வாங்க அரசே துாண்டுவது போல் ஆகிவிடும் என போலீசார் கருதுகின்றனர்.

