'டாஸ்மாக் மீது இருக்கும் அக்கறை விவசாயிகள் மீது அரசுக்கு இல்லை'
'டாஸ்மாக் மீது இருக்கும் அக்கறை விவசாயிகள் மீது அரசுக்கு இல்லை'
ADDED : அக் 26, 2025 01:12 AM

தஞ்சாவூர்: ''டாஸ்மாக் மீது இருக்கும் அக்கறை, விவசாயிகள் மீது தி.மு.க., அரசுக்கு இல்லை,'' என தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் அருகே ஆலக்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் நேற்று நாகேந்திரன் பார்வையிட்டு, அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டார்.
மேலும், அப்பகுதியில் மழையில் வீணாகிப் போன நெற்பயிர்களையும் வயலில் இறங்கி பார்த்தார்.
பின் அவர் அளித்த பேட்டி:
டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு 6.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. இது, கடந்த ஜூன் மாதமே முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது. அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து விட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை என்பதை தற்போதைய சூழலை பார்த்து அனைவரும் புரிந்து கொள்ள முடியும். நெல் கொள்முதல் பணியை முன் கூட்டியே துவங்கவில்லை. சாக்கு தட்டுப்பாடு, போதிய லாரிகள் இயக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் கொள்முதல் தாமதமாகியுள்ளது .
தற்போது, தனியார் இடத்தில் அமைக்கப்பட்ட கொள்முதல் நிலைய வாடகையை கூட விவசாயிகளிடம் வசூல் செய்கின்றனர்.
கொள்முதல் தாமதத்துக்கு செறிவூட்டப்பட்ட அரிசி தான் காரணம் என, மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர்.
நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிக்கு, தமிழக அரசின் கவனக்குறைவும், நிர்வாகத் திறமையின்மையே காரணம். டெல்டாக்காரன் என முதல்வர் சொல்வது எல்லாம் வெத்துவேட்டு.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆய்வு செய்த பிறகு தான், தஞ்சாவூரில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசுக்கு தெரிய வந்துள்ளது. பழனிசாமி வரவில்லை என்றால், துணை முதல்வர் உதயநிதி வந்து இருக்க மாட்டார்.
தமிழக அரசு இந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக் மதுக் கடைகளில் இவ்வளவு மதுபாட்டில் விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்பட்டது. டாஸ்மாக் மது விற்பனையில் காட்டிய அக்கறையை, விவசாயிகள் பிரச்னையில் தி.மு.க., அரசு காட்டவில்லை.
மழை விபரங்களை முன்கூட்டியே கணிக்க 10 கோடி ரூபாய் மதிப்பில் நவீன கருவி வாங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தியாகராஜன் சட்டசபையில் கூறினார். அந்த கருவி எங்கே? அப்படி வாங்கி இருந்தால், மழை விபரங்களை முன்கூட்டியே தெரிந்து விவசாயிகளை காப்பாற்றி இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

