ADDED : நவ 21, 2024 02:38 AM
'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றியதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது' என, அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அதன் விபரம்:
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு உரிய நீதி வேண்டி, சி.பி.ஐ., விசாரணை கோரி, அனைத்து தளங்களிலும், அ.தி.மு.க., போராடியது. அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக, மடியில் கனமில்லை என்றால், தி.மு.க., அரசு இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாது. சி.பி.ஐ., விசாரணை வழியாக, உயிரிழந்த 67 பேருக்கும் நீதி கிடைக்கட்டும்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதற்கு, அப்பகுதியை சேர்ந்த ஆளும் தி.மு.க., நிர்வாகிகளும்,எம்.எல்.ஏ.,க்களும் ஆதரவாக இருந்திருக்கின்றனர் என்பது தான் பா.ம.க.,வின் குற்றச்சாட்டு.இப்போது, நீதிபதிகள் எழுப்பியுள்ள வினாக்கள், பா.ம.க.,வின் குற்றச்சாட்டுகள் சரியானவை என்பதை உறுதி செய்துள்ளன.சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கள்ளச்சாராய சாவுகளைத் தடுப்பதில், தமிழக அரசின் தோல்விக்கு கிடைத்த சவுக்கடி.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: கள்ளச்சாராய விற்பனையை கண்டு கொள்ளாமல், வழக்கு விசாரணையை மெத்தனபோக்கில் கையாண்டு, உண்மை குற்றவாளிகளை காப்பாற்றும் போக்கில், தி.மு.க., அரசு செயல்பட்டிருப்பது, நீதிமன்றத்தின் கருத்து வாயிலாக தெரிகிறது. மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், சி.பி.ஐ., விசாரிக்க, தி.மு.க., அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த, ஆளுங்கட்சி தலையீடு இல்லாமல், சி.பி.ஐ., நல்ல தீர்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டும். இதில் தொடர்புடைய அனைவருக்கும், உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.