பொய் உரையை படிக்கக்கூடாது என்பதற்காகவே கவர்னர் வேகமாக கிளம்பிவிட்டார்: சீமான்
பொய் உரையை படிக்கக்கூடாது என்பதற்காகவே கவர்னர் வேகமாக கிளம்பிவிட்டார்: சீமான்
ADDED : ஜன 08, 2025 07:27 PM
வடலூர்,:''சட்டசபையில் தன்னுடைய உரையில் இத்தனை தூரத்துக்கு பொய் பேச வேண்டுமா என்ற அதிர்ச்சியில் தான், கவர்னர் ரவி, தன்னுடைய உரையை புறக்கணித்து வெளி நடப்பு செய்து விட்டார்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம், வடலூரில் அவர் அளித்த பேட்டி:
ஆட்சி நடத்துவோர், தங்களுக்கான உரையை தாங்களே எழுதிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில், அவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை பாராட்டி உரை எழுதிக் கொள்வரா என்ன? அடிப்படையே தவறாக உள்ளது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டு சந்தி சிரிக்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டு இடங்களிலும் நீக்கமற போதை பொருட்கள் வியாபித்துள்ளன. 24 மணி நேரமும் தமிழகம் முழுது போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. விற்பனையும் கேட்பார் கேள்வி இல்லாமல் அமோகமாக நடக்கிறது. 24 மணி நேரமும் மது கடைகள் மூடப்படாமல் திறந்தே இருக்கிறது என்றெல்லாம், கவர்னருக்காக உரை தயாரித்துக் கொடுக்கும் அரசு தரப்பு, அதை கொடுத்து கவர்னரை உரையாற்ற விடுவரா?
அவ்வளவு தூய உள்ளத்தோடு ஆட்சி செய்பவர்களா தி.மு.க.,வினர்?
ஆட்சியில் இருப்போர் என்ன எழுதிக் கொடுக்கின்றனரோ, அதை அப்படியே வரி மாறாமல் கவர்னர் படிக்க வேண்டும். அது தான் கவர்னர் உரை. இது கவர்னருக்கும் தெரியும். அதனால் தான், இவ்வளவு பொய்யை தன்னுடைய உரை என்று சம்பிரதாயத்துக்காகக் கூட சட்டசபையில் படிக்கக் கூடாது என முடிவெடுத்துத்தான், சபையில் தனக்கான உரையை படிக்காமல் வெளியேறி சென்று விட்டார் கவர்னர் ரவி.
அரசு தரப்பில் எழுதிக் கொடுத்ததை மட்டும் கவர்னர் ரவி படித்திருந்தால், அவருடைய மானம், மரியாதையெல்லாம் போயிருக்கும். நல்ல வேளை, மனசாட்சியோடு கவர்னர் வெளியேறி விட்டார்.
நான் தலைவர்களை நம்பி அரசியலுக்கு வரவில்லை. கூட்டணியாக யாரோடும் செல்ல மாட்டேன் என்பதுதான், என்னுடைய கொள்கை. அதிலிருந்து விலகி செல்ல மாட்டேன். டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியிலும், பஞ்சாபிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியும். அப்படி இருக்கும்போது, யாருடன் கூட்டணி என்பதை ஏன் வெளியில் சொல்ல வேண்டும். கூட்டணி செல்ல வேண்டிய அவசியம் என்ன?
இவ்வாறு சீமான் கூறினார்.

