தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக தஞ்சை பல்கலையில் பாடிய கவர்னர்
தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக தஞ்சை பல்கலையில் பாடிய கவர்னர்
ADDED : அக் 20, 2024 01:31 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் நேற்று நடந்த 14வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி பங்கேற்று, 668 மாணவ - மாணவியருக்கு முனைவர் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், முதுநிலை பட்டம், கல்வியியல் நிறைஞர் பட்டம், இளங்கல்வியியல், இளங்கலை பட்டம், முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை மூலம் எட்டு தங்க பத்தங்களை வழங்கினார்.
விழாவில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன், உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் ஆகியோர் பங்கேற்பதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது.
இருவரும் வரவில்லை. நேற்று முன்தினம் சென்னையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில், 'திராவிட நல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டதால், கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, விழாவை தமிழக அமைச்சர்கள் புறக்கணித்ததாக பேசப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் பல்கலைக் கழகத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை கவர்னர் ரவி உள்ளிட்டோர் முழுமையாக பாடினர்.
இதற்கிடையே, தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் ரவி பேசுகையில், ''உலக அளவில் போர்ச்சூழல் நிலவும் நிலையில், இந்தியா அமைதியின் பக்கம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. நாடுகளுக்குகிடையே மோதல்கள் நிலவும்போது, அதற்கு தீர்வு ஏற்படுத்த இந்தியாவை உலகம் உற்று நோக்குகிறது. இந்தியாவால் உதவி செய்ய முடியும் என உலகம் நம்புகிறது,'' என்றார்.