கவர்னர் உரையில் இடம்பெறும் அம்சங்கள் ஸ்பெயினில் இருந்து முதல்வர் ஆலோசனை
கவர்னர் உரையில் இடம்பெறும் அம்சங்கள் ஸ்பெயினில் இருந்து முதல்வர் ஆலோசனை
ADDED : பிப் 05, 2024 01:34 AM

சென்னை: கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து,ஸ்பெயின் நாட்டில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டசபை,கவர்னர் உரையுடன் வரும் 12ம் தேதி கூடவுள்ளது. இதைத் தொடர்ந்து, 19ம் தேதி, 2024 - 25ம்ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப் பட உள்ளது. அடுத்த நாளில், வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, நிதித்துறை மட்டுமின்றி, பல்வேறு துறைகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்; அங்கு, பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளைசந்தித்து பேசி வருகிறார்.
இந்நிலையில்,கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும்பட்ஜெட் குறித்து, நிதித்துறை செயலர் உதயசந்திரன், தனிச்செயலர் முருகானந்தம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் நேற்றுஆலோசனை நடத்தினார்.
கவர்னர் ரவி கடந்தாண்டு உரை நிகழ்த்தும்போது, சில கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டன. அவற்றுக்கு இடம் கொடுக்காத வகையில், நடப்பாண்டு கவர்னர் உரை நிகழ்வை முடிக்க அரசு முடிவெடுத்து உள்ளது.
அதற்கேற்ப கவர்னர்உரையை தயாரிக்கமுதல்வர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

