ADDED : மார் 02, 2024 12:56 AM

புதுடில்லி:நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க முடியாது என, டில்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தில் இதுவரை போட்டியிட்டு வந்தது.
இந்நிலையில் தலைமை தேர்தல் கமிஷன், கரும்பு விவசாயி சின்னத்தை, கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு ஒதுக்கியது. இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் விபரம்:
கடந்த 2021 தமிழக சட்டசபை தேர்தலில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில், தமிழகத்தின் மூன்றாவது பெரியகட்சியாக நாம் தமிழர் உள்ளது.
அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருப்பினும், சட்டசபை தேர்தல், உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்கள் உட்பட ஆறு தேர்தல்களை இதுவரை சந்தித்துள்ளது.
அனைத்திலுமே, கரும்பு விவசாயி சின்னத்தை பயன்படுத்திவந்துள்ளோம்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது, தலைமை தேர்தல் கமிஷனின் இலவச தேர்தல் சின்ன பட்டியலில் இருந்து, தேர்தல் சின்ன ஒதுக்கீடு ஆணையின்படி, கரும்பு விவசாயி சின்னத்தை தேர்ந்தெடுத்தோம்.
கடந்த 2021 மற்றும் 2022ல் நடந்த தமிழகஉள்ளாட்சி தேர்தல்களிலும், அதே சின்னத்தை தமிழக தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஒதுக்கியது.
அப்படி இருக்கையில், கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு, கரும்பு விவசாயி சின்னத்தை தலைமை தேர்தல் கமிஷன் ஒதுக்கி உள்ளது.
எனவே, அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து, கரும்பு விவசாயி சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் கமிஷன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, 'கரும்பு விவசாயி சின்னத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. அதனால், சின்னத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
'இந்த விவகாரத்தில் உங்களுக்கு உதவ முடியாது' என, நாம் தமிழர் கட்சி தரப்பிடம் வேதனையுடன் தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

