பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடி இழிவான பேச்சு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது ஐகோர்ட்
பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடி இழிவான பேச்சு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது ஐகோர்ட்
ADDED : ஏப் 23, 2025 11:08 PM
சென்னை:சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது, சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, விலைமாதுவுடன் சைவம், வைணவ சமயங்களை தொடர்புபடுத்தி, அச்சிட முடியாத வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு, ஹிந்து சமய ஆர்வலர்கள், அனைத்து கட்சிகள், பெண்கள் என, பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து, பொன்முடி நீக்கப்பட்டார். இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில், அமைச்சர் பொன்முடியை விடுவித்தது தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி பேசியது தொடர்பான வீடியோ, நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது.
அதை பார்த்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், 'அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதா' என்ற கேள்விகளை எழுப்பியிருந்தார். ஐந்து புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, அரசு தரப்பு கூறியதை அடுத்து, அதன் மீது வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று பிற்பகல், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''அமைச்சரின் பேச்சுக்கு எதிராக பெறப்பட்ட இரண்டு புகார்கள் மீது, முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதில் எவ்வித முகாந்திரம் இல்லை என்பதால், முடித்து வைக்கப்பட்டது. அதேபோல, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், இரண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. அதிலும் அமைச்சருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என தெரிவித்ததை ஏற்று, அவ்வழக்குகளை மதுரை அமர்வு முடித்து வைத்துள்ளது,'' என்றார்.
அமைச்சர் பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜராகி, ''இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், இங்கு மீண்டும் அதே விவகாரத்தை விசாரணைக்கு எடுக்க அவசியம் இல்லை. உள்அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் தான் அமைச்சர் பேசியுள்ளார்; அவருடைய பேச்சு, பொதுவெளியில் நடந்தது அல்ல. அமைச்சரின் முழுமையான பேச்சை கேட்காமல், எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு குறித்து, சமீபத்திய கூட்டத்தில் அமைச்சர் பேசியுள்ளார்,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி உத்தரவு:
அமைச்சர் பொன்முடியின் பேச்சு, பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், ஹிந்துகளின் இரு முக்கிய பிரிவுகளான சைவம் மற்றும் வைணவம் சமயத்தினரின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் உள்ளது.
அவரின் பேச்சு, வெறுப்பு பேச்சு என்கிற வரம்பிற்குள் வருகிறது. அதற்கான முகாந்திரம் உள்ளது. அவரின் பேச்சுக்காக, கட்சி பொறுப்பில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என, காவல் துறை தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சலனமற்ற நிலையில் காவல் துறை உள்ளது. இந்த செயல் துரதிஷ்டவசமானது; வேதனை அளிக்கிறது. வெறுப்பு பேச்சை, ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது.
ஏற்கனவே, ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு வாயிலாக சலுகை பெற்ற அமைச்சர், அதை தவறாக பயன்படுத்தி உள்ளார். எனவே, வெறுப்பு பேச்சு தொடர்பாக, பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு, உயர் நீதிமன்ற பதிவுத் துறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்கை தகுந்த உத்தரவுகளுக்காக, தலைமை நீதிபதி முன், பதிவுத் துறை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் அல்லது தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் தாக்கல் செய்த வழக்கு, இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.