கன்னியாகுமரியில் உள்ள கண்ணாடி பாலம் 192 டன் எடையை தாங்கும் திறனுடையது ஆய்வில் உறுதி செய்தது நெடுஞ்சாலை துறை
கன்னியாகுமரியில் உள்ள கண்ணாடி பாலம் 192 டன் எடையை தாங்கும் திறனுடையது ஆய்வில் உறுதி செய்தது நெடுஞ்சாலை துறை
ADDED : மே 07, 2025 12:19 AM

சென்னை:கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலம், ஒரே நேரத்தில், 192 டன் எடையை தாங்கும் என்பது, இரண்டு கட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில், 10 மீட்டர் அகலம் மற்றும், 77 மீட்டர் நீளத்தில், கடலுக்கு மேல் கண்ணாடி இழை பாலத்தை, 37 கோடி ரூபாய் செலவில் நெடுஞ்சாலை துறையினர் அமைத்துள்ளனர்.
இப்பாலத்தை, முதல்வர் ஸ்டாலின், 2024 டிசம்பர் 30ம் தேதி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பலத்த காற்று மற்றும் அலைகளின் அதிர்வை தாங்கும் வகையில், வில்லின் நாண் வளைவு வடிவில், இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்பம் குறித்து அறிய, பல்வேறு மாநில அரசுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. பாலத்தின் உறுதி தன்மை சான்று குறித்தும், ஆர்வமாக கேட்கின்றன.
எனவே, பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாலத்தின் பலம் குறித்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கவும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுஇருந்தார்.
இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலை துறை வாயிலாக, இரு வேறு நிறுவனங்கள் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பாலத்தின் பலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், துாத்துக்குடி தனியார் பொறியியல் கல்லுாரி வாயிலாக, கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தின் உறுதி தன்மை குறித்து, ஏப்ரல் 15 முதல், 18 வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக, நீர் நிரப்பப்பட்ட, 200 கிலோ எடை உடைய, 964 'பேரல்'கள் பாலத்தின் மேல் அடுக்கி வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் அழுத்தம் தரப்பட்டது. இதன் வாயிலாக, 192.8 டன் வரை எடையை கண்ணாடி பாலம் தாங்கும் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல, சென்னை ஐ.ஐ.டி., கட்டமைப்பு பொறியியல் பிரிவு வாயிலாகவும், 'டைனமிக் புரூப்' சுமை சோதனை முறையில், பாலத்தின் உறுதி கண்டறியப்பட்டது.
இதற்காக, கண்ணாடி இழையின் முனைகளில், 'ஆக்செலரோ மீட்டர்' பொருத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு வாயிலாக, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலம் பாதுகாப்பானது என, சென்னை ஐ.ஐ.டி., குழு சான்று அளித்துள்ளது.
இப்படி இரு வேறு ஆய்வுகள் வாயிலாக, பாலத்தின் உறுதி தன்மை குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

