திலகவதிக்கு அரசு தந்த வீட்டை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது: ஐகோர்ட்
திலகவதிக்கு அரசு தந்த வீட்டை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது: ஐகோர்ட்
ADDED : ஜன 26, 2025 03:14 AM
சென்னை: 'சாகித்ய அகாடமி விருது பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதிக்கு, கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வீட்டை, வேறு எவருக்கும் தரக்கூடாது' என, வீட்டுவசதி வாரியத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 97வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்ய அகாடமி, தேசிய, மாநில மற்றும் சர்வதேச அளவில் இலக்கிய விருதுகள் பெற்றவர்களுக்கு, 'கனவு இல்லம்' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது.
தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில், 2022ல் கனவு இல்லம் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி எழுதிய, 'கல் மரம்' என்ற நாவலுக்கு, சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இதையடுத்து, சென்னை அண்ணா நகரில், 1,409 சதுரடி வீடு, 2022ல் அவருக்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், வீட்டுவசதி வாரியத்தில் ஏற்கனவே வீடு ஒதுக்கீடு பெற்றதாக கூறி, கனவு இல்லம் திட்டத்தின் கீழ், திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்த உத்தரவை ரத்து செய்து, கடந்தாண்டு ஜனவரியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக்கோரியும், தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கக்கூடாது எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தில், திலகவதி மனு தாக்கல் செய்தார். மனு விபரம்:
சொந்தமாக வீடு இருந்தாலும், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு பெற, எழுத்தாளர்களுக்கு தகுதி உண்டு என, 2022 அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதை மாற்றி, வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற தகுதி இல்லை என, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பத்திரப்பதிவுக்காக காத்திருந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து எனக்கு ஒதுக்கீடு செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர், ''தமிழக அரசு, வீட்டுவசதி வாரியம், பிப்., 11ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை, திலகவதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை, வேறு எவருக்கும் ஒதுக்கக்கூடாது,'' என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.